தொழில்

ரூ.47.50 லட்சத்தில் MINI Countryman C.. சென்னையில் அறிமுகம்!

புதிய MINI Countryman C SUV model வாகனத்தை ரூ.47.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் BMW Group India அறிமுகப்படுத்தியுள்ளது.

கடந்த புதன்கிழமை, சென்னை மகிந்திரா வேர்ல்ட் சிட்டியில் உள்ள BMW குழுமத்தின் உற்பத்தி ஆலையில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னையில் உற்பத்தி..

2007 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் BMW குழுமத்தின் சென்னை உற்பத்தி ஆலை, இந்தியாவில் BMW-யின் முக்கிய உற்பத்தி மையமாக திகழ்ந்து வருகிறது. 14 நிமிடங்களுக்கு ஒரு புதிய வாகனம் இங்கு உற்பத்தியாகிறது. இந்த ஆலையில் பல BMW வகைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள MINI Countryman C-யும் இங்கு பிரத்யேகமாக உற்பத்தி செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பரிமாணம்..

இந்த நிகழ்ச்சியில் பேசிய BMW Group India-வின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹர்தீப் சிங் பிரார் (Hardeep Singh Brar), “புதிய MINI Countryman C என்பது MINI பிராண்டின் புதிய பரிணாமம். இது இந்தியாவில் தயாரிக்கப்படுவது எங்களுக்கு பெருமை அளிக்கிறது”என்றார். மேலும், இந்தியாவில் பிரீமியம் காம்பாக்ட் எஸ்யூவிகளுக்கான (Premium Compact SUV) தேவை அதிகரித்து வருவதாகவும், 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 42 சத விகித வளர்ச்சியைப் MINI பதிவு செய்திருப்பதாகவும் கூறினார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Countryman C, இந்த வளர்ச்சியை மேலும் வேகப்படுத்தும் என்றும் பிரார் நம்பிக்கை தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய, BMW Group Plant Chennai-ன் நிர்வாக இயக்குநர் தாமஸ் டோஸ் (Thomas Dose), “இந்த மாடலை சென்னை ஆலையில் தயாரிப்பதன் மூலம் சிறந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்க முடியும்” என்றார்.

MINI-யின் அடுத்த வளர்ச்சி மையம் இந்தியா..

BMW Group India, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 4,567 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. குறிப்பாக SUV பிரிவு விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது.

Countryman C வாகன அறிமுக நிகழ்ச்சியில் பேசிய MINI நிறுவனத்தின் APAC மற்றும் EMEA துணைத் தலைவர் ஃப்ளோரியன் குயென்ஸ்ட்னர் (Florian Kuenstner), “2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் MINI பிராண்டிற்கான உலகின் அதிவேக வளர்ச்சி சந்தையாக இந்தியா மாறும்” என்றார். மேலும், இந்திய பொருளாதார வளர்ச்சியுடன் மக்களின் வருமானமும் அதிகரித்து வருவதால் பிரீமியம் மற்றும் சொகுசு வாகனங்களுக்கான தேவை தொடர்ந்து உயரும் என்றார்.

விலையும்.. தொழில்நுட்பமும்..

MINI Countryman C, 1.5 லிட்டர் TwinPower Turbo பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 156 ஹார்ஸ் பவர் திறனையும், 240Nm டார்க்கையும் வழங்குகிறது. 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உட்பட பல புதிய தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

ரூ.47.50 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள MINI Countryman C-யை மாத தவணையிலும் (EMI) வாடிக்கையாளர்கள் வாங்கமுடியும். ரூ.56,990 முதல் மாத தவணை துவங்கும் நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில திட்டங்களில் முன்பணம் (Down Payment) தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஆண்டுகளுக்குப் பிறகு 66 சத விகிதம் வரை மீள்கொள்முதல் (Buyback) மதிப்பு, 4 ஆண்டுகளுக்கு பிறகு 59 சத விகிதம் வரை மீள்கொள்முதல் மதிப்பு MINI Countryman C-க்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனம், BMW X1, Audi Q3 மற்றும் Mercedes-Benz GLA போன்ற பிரீமியம் காம்பாக்ட் எஸ்யூவி-களுடன் போட்டியாக அமையும் என கருதப்படுகிறது. இந்தியாவில் BMW Group விற்பனையில் தமிழ்நாட்டின் பங்கு சுமார் 8 சதவீதமாக இருந்துவரும் நிலையில், MINI Countryman C-க்கு தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

 

 

Related Posts