BREAKING

பொது

தேர்தல் ரிசல்ட் அன்று “விபரீதங்கள் ஏதும் நடக்கக்கூடாது”.. எச்சரிக்கும் உளவியல் நிபுணர்!

தமிழ்நாட்டில் கடந்த 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதன் முடிவுகள் வரும் மே 4ஆம் தேதி வெளியாக உள்ளது. ஆண்டாண்டு காலமாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி நடிகர் விஜய் இந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தார். விஜய்யின் ஒவ்வொரு பிரச்சாரத்தின் போதும் ஆர்ப்பரிக்கும் இளைஞர் கூட்டத்தை கட்டுக்குள் வைப்பதே பெரும் சவாலாக அரசுக்கு இருந்தது. இந்நிலையில் இப்பொழுது அரசுக்கும் பெற்றோருக்கும் புதிதாக ஒரு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதுதான் விஜய்யின் வெற்றி வாய்ப்பு குறித்த தலைவலி.

விஜய் தோல்வி அடைந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று சிலர் காணொளிகள் வெளியிடுவதும், அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார் ஆட்சி அமைப்பார் என அதீத நம்பிக்கையுடன் பலர் இருப்பதும் மக்களிடையே டென்ஷனை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் இந்த டென்ஷன் குறித்தும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் இந்த நிலைப்பாடு குறித்தும் உளவியல் நிபுணர் கிருத்திகாதரனிடம் கோத்தாரி டிஜிட்டல் சார்பாக பேசினோம்.

மே 4 ஆம் தேதி என்ன செய்ய வேண்டும்?

விஜயின் அரசியல் வருகைக்கு பிறகு, அவருடைய ஆதரவாளர்கள் சிலருடைய காணொளிகள் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அரசியல் புரிதல் இல்லாமல் இளைஞர்களும்,குழந்தைகளும்,பெண்களும் ஏதேதோ பேசுகிறார்கள். தவெகவுக்கு ஆதரவாக ரீல்ஸ் வெளியிட்டால் தங்களுக்கு சமூக வலைதளங்களில் வியூஸ் லைக்ஸ் அதிகமாக வருகிறது என்ற ஒரே காரணத்திற்காக திடீரென சிலர் விஜய்க்கு ஆதரவாக ரீல்ஸ் வெளியிடுகிறார்கள். இத்தனை நாள் எங்கு இருந்தார்கள் என்று தெரியாத இன்புளுவென்சஸ் (influencers) கூட, விஜய் கூறியது போல இப்பொழுது வெள்ளை சட்டை காக்கி பேண்ட் அணிந்து கொண்டு அரசியல் பேசுகிறார்கள். விஜய் குறித்து காணொளிகள் இருந்தால் அதை உடனடியாக வைரலாக்கும் வகையில் சில டிஜிட்டல் நிறுவனங்கள் ரகசிய வேலை செய்கின்றன. இந்த சூழ்ச்சிகள் குறித்து புரிதல் இல்லாமல் சாதாரண மக்கள் இதற்கு பலிகடா ஆகிறார்கள்.

தேர்தல் தினத்தன்று பெற்றோர்களை விஜய்க்கு வாக்களிக்க கோரி சிறுவர்கள் தொல்லை செய்வது போன்று காணொளிகள் பல வெளியாகின. அவற்றை நம்ம பலர் சிரித்து விட்டு கடந்து சென்றாலும், அது சாதாரணமான விஷயம் அல்ல. தேர்தல் முடிவு விஜய்க்கு சாதகமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. காரணம் இது ஒரு ட்ரெண்ட் போல் ஆகிவிட்டது. பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளின் போது மாணவர்கள் ஒரு சிலர் தோல்வி பயத்தில் விபரீத முடிவுகளை தேடிப்போன செய்திகள் தொடர்ச்சியாக வரும். அதேபோல ஒரு சூழலில் தான் நாம் இப்போது இருக்கிறோம். விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார்; தேர்தலிலும் நின்றுவிட்டார்; அவர் வெற்றியும் பெறுவார் என்ற நம்பிக்கையும் பலரின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. ஒருவேளை இந்த நம்பிக்கை பொய்த்து விட்டால், தங்கள் கையில் இருந்த வாய்ப்பு நழுவி விட்டது போன்ற ஒரு தோல்வி உணர்வை இளைஞர்கள் பெறுவார்கள். மனதில் இருக்கும் வலியை ஆற்றுவதற்காக தங்களை தாங்களே துன்புறுத்திக் கொள்ளும் விபரீத எண்ணங்களும் எழலாம்.

குறிப்பாக டீனேஜர்ஸ்களுக்கு இருக்கும் ஹார்மோன்ஸ் அவர்களை துடிப்பாக செயல்பட வைக்கும். ஒரு காதல் தோல்வி ஏற்பட்டால் எப்படி மனம் உடைவார்களோ அதே போல் மனம் உடைவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதனால், மே 4 ஆம் தேதி பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் யாரிடம் பேசுகிறார்கள், என்ன பேசுகிறார்கள், வீட்டில் சரியாக சாப்பிடுகிறார்களா, செய்திகளில் என்ன பார்க்கிறார்கள் என்பது உட்பட பல விஷயங்களை நாம் கண்காணிக்க வேண்டும். ஒருவேளை தேர்தல் முடிவுகள் வரும் நாளில் அவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகங்கள் இருந்தால் பெற்றோர்கள் மிக கவனமாக அவர்களின் அருகிலேயே இருக்க வேண்டும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை வெளியாகும் நேரத்தில், ஒவ்வொரு கட்ட வாக்கு எண்ணிக்கையை பார்க்கும் பொழுது தங்கள் வீட்டில் உள்ள இளைஞர்கள் குழந்தைகளின் மனநிலையையும் உடல் மொழியையும் சுற்றி இருப்பவர்கள் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். உணர்ச்சி வயப்பட்டு எங்கேயாவது தனியாக செல்கிறார்களா?, எதாவது கூர்மையான ஆயுதங்களை கையில் வைத்திருக்கிறார்களா? என்பது உட்பட பல விஷயங்களை கவனிக்க வேண்டும். இது பெற்றோர்களை அச்சுறுத்துவதற்காக சொல்லப்படவில்லை. ஒரு குழு மனப்பான்மையில் இப்போது விஜய் குறித்து பல வீடியோக்களை வெளியிட்டு வரும் இளைஞர்கள், நாளை அதே குழு மனப்பான்மையில் விபரீத முடிவுகளை எடுக்க நேரலாம். தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் அடுத்த ஓரிரு நாட்களுக்கு அவர்கள் மீது நம்முடைய கவனம் இருக்க வேண்டும்.

குழந்தைகள் இளைஞர்களின் மன நிலையில் மிகுந்த பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால், அவர்களை மனநல ஆலோசனைக்கு அழைத்துச் செல்லவும் பெற்றோர்கள் தயங்க கூடாது. தேர்தலின் போது எப்படி குழந்தைகளிடம் அடம் பிடித்து வாக்கு கேட்க சொன்னார்களோ, அதே போல் “தேர்தல் முடிவு வெளியான பிறகு எவ்வித விபரீத முடிவுகளையும் யாரும் எடுக்க கூடாது.பொறுமையாக இருக்கவேண்டும்” என்று சொல்ல வேண்டிய கடமை விஜய் மற்றும் அவரின் கட்சியினருக்கும் இருக்கிறது. விஜயே கூறினாலும் கேட்கக் கூடிய மனநிலையில் சில இளைஞர்கள் இருக்க மாட்டார்கள்; அவர்கள் மீது இன்னும் அதீத கவனம் செலுத்துங்கள். புதிதாக எந்த அரசு ஆட்சி அமைத்தாலும், இந்த உணர்ச்சி வயப்படும் இளைஞர் கூட்டத்தை சமாளிப்பது பெரும் சவாலாக அந்த அரசுக்கு இருக்கும்.

ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள்.. “மகன் கத்தரிக்காய் திருடும்போது கண்டிக்காத அம்மா, அவனை கழுமரம் ஏற்றிய போது கதறி அழுதாளாம்” அதுதான் இன்றைக்கு நடக்கிறது. முதன்முறையாக அரசியல் புரிதல் இல்லாமல் ஆர்வக்கோளாறில் தங்கள் குழந்தைகள் காணொளிகள் வெளியிட்டபோது அல்லது பேசும்பொழுது அன்றே கண்டித்து இருந்தால் இன்று இவ்வளவு அச்சப்படும் தேவை ஏற்பட்டிருக்குமா? இப்பொழுது காலம் கடந்து விட்டது; குழந்தைகளை கண்காணித்து கவவுன்சிலிங் தருவதை தவிர பெற்றோருக்கு வேறு வழியே இல்லை என்றார் உளவியல் நிபுணர் கிருத்திகாதரன்.

Related Posts