மும்பையில் மட்டன் புலாவுக்கு பின்னர் தர்பூசணி சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தில், குளிர்பான நிறுவனங்கள் தர்பூசணி விற்பனையை தடுக்கும் நோக்கத்தில் இந்த வதந்தியை பயன்படுத்தியுள்ளார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கடந்த சனிக்கிழமை இரவு மும்பை நகரில் வசித்து வந்த அப்துல்லா டக்காடியா, அவரது மனைவி நஸ்ரீன், மகள்கள் ஆயிஷா மற்றும் ஷைனாப் ஆகியோர் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட மட்டன் புலாவை சாப்பிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் தர்பூசணி பழத்தையும் சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் சில மணி நேரங்களிலேயே நால்வருக்கும் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அனைவரும் உயிரிழந்தனர்.
இதனால் வட இந்தியாவில் சில மாநிலங்களில் தர்பூசணி பழம் சாப்பிட்டால் இறப்பு ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. சில ஊடகங்களும் சமூக வலைதள பதிவுகளும் கூட இந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்தன. ஆனால் தற்போது வெளியாகி உள்ள அவர்களது பிரேத பரிசோதனை அறிக்கை இந்த மரணத்திற்கு காரணம் அவர்களது உணவில் நஞ்சு இருந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இது வட இந்திய மாநிலங்களில் தர்பூசணி விலையை சரியச்செய்தது. இந்நிலையில் இந்த சம்பவத்தை ஊதி பெரியதாக்கியதில் குளிர்பான நிறுவனங்களுக்கு பங்கு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு கோடைகாலத்தில் சென்னையில் தர்பூசணி பழத்தில் சிவப்பு நிறத்தை அதிகரிக்க ஊசி மூலம் ரசாயனம் சேர்க்கப்படுவதாக உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டது. இதனை ஒட்டி தமிழ்நாட்டில் தர்பூசணி பழங்கள் விற்பனையாகாமல் தேங்க தொடங்கின. இதனால் தர்பூசணியின் விலை திடீரென சரிய தொடங்கியது.
இதை எதிர்த்து விவசாயிகள் குரல்கொடுத்தப் பின்னரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மாற்றப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னரும் குளிர்பான நிறுவனங்களின் சதி திட்டம் இருந்ததாக அப்போது கூறப்பட்டது.









