மேற்கு வங்கம் என்றாலே ”மமதா பானர்ஜி கோட்டை” என கருதப்பட்டது. ஆனால் 2026 தேர்தல் தோல்வி, ஆட்சி இழப்பு மட்டுமல்ல, மமதா பானர்ஜியின் சம்ராஜ்யம் சரிய ஆரம்பித்திருப்பதையும் காட்டுகிறது. இந்த தோல்வி TMC கட்சிக்குள் பல ஆண்டுகளாக கொதித்துக் கொண்டிருந்த அதிருப்தியை வெளிக்கொண்டு வந்த அரசியல் வெடிகுண்டாக மாறியுள்ளது.
“தீதி”யின் சாம்ராஜ்யம்..
மேற்கு வங்க மக்களால் “தீதி” என்று மமதா அன்போடு அழைக்கப்படுபவர். 34 ஆண்டுகள் ஆட்சி செய்த கம்யூனிஸ்ட் கோட்டையை தகர்த்தவர். 2011-ல் இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி மம்தா ஆட்சியை பிடித்தபோது, அது மேற்கு வங்க அரசியலின் முழு அதிகார அமைப்பையும் தலைகீழாக மாற்றிய புரட்சியாக இருந்தது.
சிங்கூர், நந்திகிராம் போராட்டங்கள் மூலம் விவசாயிகளின் நம்பிக்கையை பெற்றார். ஏழை மக்களின் தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
2021 தேர்தலில் பாஜக தனது முழு அரசியல் சக்தியையும் களமிறக்கிய போதும், மம்தா தனியாக நின்று வெற்றியை பெற்றார். அப்போது இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த மாநிலத் தலைவராக உருவானார். தேசிய ஊடகங்களால் “Bengal Tigress” என்று அழைக்கப்பட்டார். அதேப்போல 2023 ஆம் ஆண்டு உருவான I.N.D.I.A. கூட்டணியின் முக்கிய தலைவராகவும் இருக்கிறார்.
ஆனால் இன்று அதே மம்தா பானர்ஜி தனது அரசியல் வாழ்க்கையின் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறார்.
இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்?
நீண்ட ஆண்டுகள் ஆட்சி செய்யும் அரசின் மீது மக்களுக்கு இயல்பாகவே ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிடும். அதுபோன்ற அதிருப்தி ஒருபுறம் இருந்தாலும், மமதா அரசின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை குறைய சில சம்பவங்கள் காரணமாக அமைந்தது.
மமதா ஆட்சியின் மிகப்பெரிய முறைகேடாக ஆசிரியர் நியமன முறைகேடு (SSC Scam) இருந்தது. ஆயிரக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் பணத்திற்கு விற்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அவருக்கு தொடர்புடைய இடங்களில் பெருமளவு பணம் மற்றும் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அமைப்புகள் தெரிவித்தது. இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பிளாக்மார்க்காக மாறியது.
இதுமட்டுமல்லாமல், நிலக்கரி கடத்தல் (Coal Scam) குற்றச்சாட்டுகள், கால்நடை கடத்தல் (Cattle Smuggling) வழக்குகள், உள்ளாட்சி அமைப்புகளில் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள், பல்வேறு அரசு ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை, வங்கதேசத்தினர் ஊடுருவல் என பல சர்ச்சைகளில் மமதா அரசு சிக்கியது.
அதேபோல, அரசின் நலத்திட்டங்கள், வீட்டு வசதி திட்டங்கள், வேலை வாய்ப்பு திட்டங்கள் போன்றவற்றைப் பெற சில உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கமிஷன் வசூலிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்தன. இந்த விவகாரம் கிராமப்புற வாக்காளர்களிடம் TMC-க்கு எதிரான எதிர்மறை மனநிலையை உருவாக்கியதாக பல அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, தான் வளர்த்த கன்று தன்னையே முட்டுவது போல, திரிணாமுல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் தனக்கென ஒரு அடையாளத்தை வளர்த்துக்கொண்ட, அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சுவேந்து அதிகாரி பாஜகவை அதிவேகமாக வளர்த்தெடுத்தார். அதன் விளைவாக, 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில், 294 தொகுதிகளில் பாஜக 207 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. அனால் திரிணாமுல் காங்கிரஸ் வெறும் 80 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.

தேர்தல் தோல்விக்கு பின்னர் வெடித்த கிளர்ச்சி!
தேர்தலுக்கு முன்பே TMC-க்குள் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் ஆதிக்கம் குறித்து அதிருப்தி நிலவியது. கட்சியின் எதிர்கால தலைவராக அவர் முன்னிறுத்தப்படுவதாக ஒரு தரப்பு கருதியது. இதனால் பல மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், கட்சி சிலரின் கட்டுப்பாட்டுக்குள் செல்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்நிலையில் 2026 தேர்தலில் TMC தோல்வியடைந்ததும், இதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த அதிருப்திகள் வெடித்தன. முதல்வர் வேட்பாளரான மமதா பானர்ஜி, தான் போட்டியிட்ட பவானிப்பூர் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்ததால், TMC-ன் சோவன்டெப் சட்டோபாத்யாய் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். ஆனால், தனக்கு ஆதரவாக 60 MLA-க்கள் கையெழுத்திட்டிருப்பதாக ரிதாப்ரதா பானர்ஜி அவைத்தலைவருக்கு கடிதம் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக ரிதாப்ரதா பானர்ஜி தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, TMCயில் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தவர்கள் பலர் தொடர்ச்சியாக ராஜினாமா செய்ய ஆரம்பித்துள்ளனர். கட்சியே இரண்டு பிரிவுகளாக உடையும் நிலை ஏறட்டுள்ளது. இது மமதாவிற்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இது மேற்குவங்கத்தில் கொடிகட்டி பறந்த மம்தாவின் சாம்ராஜ்ஜியம் சரிய தொடங்கியிருப்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.









