ஈரான் புதிய உச்ச தலைவரான மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் கிளம்பியுள்ளது.
ஈரான் மீது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் போர் ஒரு மாதம் கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. போரில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து அவரது மகன் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றார். ஆனால், அயதுல்லா கமேனியை கொல்ல நடத்தப்பட்ட தாக்குதலின் போது, அவரது மகன் மொஜ்தபா கமேனியும் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டது. மேலும், அவருக்கு ரகசிய இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.
இதை உறுதிப்படுத்தும் வகையில், இன்று வரை மொஜ்தபா கமேனி எந்த வகையிலும் தன் முகத்தை உலகிற்கு காட்டவில்லை. சமீபத்தில் , பாரசீக புத்தாண்டுக்குகூட வாழ்த்து தெரிவித்து அவரிடமிருந்து அறிக்கை மட்டுமே வெளியானது. மேலும், அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போரில் ஈரான் பின்வாங்காது என, அவர் விடுத்ததாக கூறப்படும் அறிக்கையை வைத்தே ஊடகங்களில் செய்திகள் வெளியானது.
இந்நிலையில், ‘ஈரானுடன் பேச்சு நடத்துகிறோம்; ஆனால், புதிய உச்ச தலைவருடன் நடக்கிறதா என்பது தெரியவில்லை. ஏனெனில், அவர் உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியவில்லை’ என, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் கூறியிருந்தார். இதையடுத்து, மொஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறாரார என்ற சந்தேகம் அதிகமாகியது.
இந்நிலையில், மொஜ்தபா கமேனி கைப்பட எழுதியதாக ஒரு கடிதம் வெளியாகியுள்ளது. அந்த கடிதத்தில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானுக்கு பக்கபலமாக இருக்கும் ஈராக் அரசுக்கும் மக்களுக்கும் நன்றி. ஈரான் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்த ஈராக்கின் ஷியா மத தலைவர் அயதுல்லா அலி சிஸ்தானிக்கு பாராட்டுகள்” என குறிப்பிட்டுள்ளார். இந்த கடிதம் அவர் கைப்பட எழுதியதுதானா என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது.
இத்தனை சந்தேகங்களுக்கு பிறகும், மொஜ்தபா கமேனி பொதுவெளியில் நேரடியாக தோன்றாமல், அவரது செய்திகள் அனைத்தும் அறிக்கைகளாகவோ அல்லது ஆடியோ வடிவிலோ வெளியாகி வருவது டிரம்ப்பின் கேள்வியையே அனைவரும் கேட்கும்படியாக இருக்கிறது.









