உலக இந்திய வம்சாவளியினர் அமைப்பு (Global Organization of People of Indian Origin-GOPIO) மற்றும் உலகத் தமிழர் அமைப்பு (Global Tamil Organisation-GTO) இணைந்து, தமிழ்நாட்டின் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்காக உலகத் தமிழர் முதலீடுகளையும் நிபுணத்துவத்தையும் ஒருங்கிணைக்கும் ஒரு சர்வதேச முயற்சியை முன்னெடுத்துள்ளன.
சென்னையில் GOPIO-GTO இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில் GOPIO-GTO உலக வணிக மாநாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த மாநாடுகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முறை நிபுணர்களை தமிழ்நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளுடன் இணைப்பதே நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உலகளவில் 8 கோடிக்கும் அதிகமான மக்களைக் கொண்ட தமிழர் புலம்பெயர் சமூகமானது முதலீடு, தொழில்நுட்பம், அறிவு மற்றும் சர்வதேச வணிக வலையமைப்புகளின் மிகப்பெரிய ஆதாரமாக உள்ளது. இந்த வலிமையை திட்டமிட்ட முறையில் பயன்படுத்துவதன் மூலம், தமிழ்நாடு 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 2050-க்குள் 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார இலக்கை அடைய முடியும்” என GOPIOவின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செழியன் கூறினார்.
இஸ்ரேல், சீனா, அயர்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள், தங்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த சமூகங்களை பொருளாதார வளர்ச்சிக்காக வெற்றிகரமாக பயன்படுத்தியிருக்கின்றன. அவற்றை முன்மாதிரியாக கொண்டு இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாக இந்நிகழ்ச்சியில் கூறப்பட்டது.
அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இலங்கை (ஜூலை 2026), துபாய் (ஆகஸ்ட் 2026), மொரீஷியஸ் (செப்டம்பர் 2026), மலேசியா (அக்டோபர் 2026) மற்றும் பாரிஸ் (ஏப்ரல் 2027) ஆகிய இடங்களில் உலகத் தமிழ் வணிக மாநாடுகள் நடத்தப்பட உள்ளன. இந்த மாநாடுகளில் முதலீட்டு விளக்கக் கூட்டங்கள், தொழில் சந்திப்புகள், வணிக ஒப்பந்தங்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் ஆகியவை இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டது.
மேலும், உலகத் தமிழர்களின் திறன்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து தரவுகள் சேகரித்தல், பல்வேறு நாடுகளில் வணிக அமைப்புகளை உருவாக்குதல், தமிழர் முதலீட்டு இணைய தளத்தை தொடங்குதல் மற்றும் 2027-ல் தமிழ்நாட்டில் உலகத் தமிழர் முதலீட்டு உச்சி மாநாடு நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது.
உற்பத்தித் தொழில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் தளவாடத் துறைகள் போன்றவற்றில் முதலீடுகள் அதிகரிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டது. இந்த முயற்சி உலகத் தமிழர்களையும் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் இணைக்கும் முக்கிய பாலமாக அமையும் என்று GOPIO மற்றும் GTO நம்பிக்கை தெரிவித்துள்ளன.








