வணிகம்

ஐபிஓக்கு தயாராகும் ஜியோ…

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தனது ஆரம்ப பொது பங்கு வெளியீட்டுக்கான (IPO) வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸ் (DRHP) தாக்கல் செய்ய நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்த DRHP இன்று இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான SEBI, BSE மற்றும் NSE ஆகியவற்றில் தாக்கல் செய்யப்படும் என்று பங்குச் சந்தைக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், தலா ரூ.10 முகமதிப்புள்ள 27 கோடி புதிய ஈக்விட்டி பங்குகளை புத்தக கட்டமைப்பு (Book Building) முறையில் நிர்ணயிக்கப்படும் விலையில் வெளியிட திட்டமிட்டுள்ளது. 2025-26 நிதியாண்டு முடிவில் ஜியோவின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 52.4 கோடியாக உயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி கூறுகையில், “ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் ஐபிஓவுக்கான வரைவு அறிக்கையான (DRHP) தாக்கலுக்கு நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது எனக்கும், ரிலையன்ஸ் குடும்பத்திற்கும், எங்கள் கோடிக்கணக்கான பங்குதாரர்களுக்கும் மிகவும் உணர்வுபூர்வமான தருணமாகும்,” என்றார்.

மேலும், “ஜியோவின் பங்குச் சந்தை பட்டியலிடல், உலகளாவிய அளவில் தொழில்நுட்ப திறன் மற்றும் மதிப்பைக் கொண்ட நிறுவனங்களை இந்தியா உருவாக்க முடியும் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டும். தற்போதைய மற்றும் புதிய முதலீட்டாளர்களுக்கு ஜியோவில் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

ஜியோவின் வளர்ச்சி ஆயிரக்கணக்கான இளம் இந்திய பொறியாளர்களின் துணிச்சல், படைப்பாற்றல் மற்றும் அர்ப்பணிப்பின் விளைவு என்றும், இந்தியா தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்யும் நாடு மட்டுமல்ல, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் நாடாகவும் ஜியோ திகழ்கிறது என்றும் முகேஷ் அம்பானி கூறினார்.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் அம்பானி கூறுகையில், “ஜியோவின் பயனாளர் எண்ணிக்கை 52.4 கோடியை கடந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ தனது இடத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது” என்றார். மேலும், ஜியோவின் 5ஜி பயனாளர்கள் எண்ணிக்கை 26.8 கோடியை தாண்டியுள்ளது. இது சீனாவுக்கு வெளியே ஒரே நாட்டில் செயல்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மிகப்பெரிய 5ஜி பயனாளர் அடிப்படையாகும். கடந்த நிதியாண்டில் மட்டும் 7.7 கோடி புதிய 5ஜி பயனாளர்கள் இணைந்துள்ளனர்.

2025-26 நிதியாண்டில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் வருவாய் 14.6 சதவீதம் உயர்ந்து ரூ.1,46,885 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் வரலாற்றில் முதல் முறையாக வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.30,000 கோடியை தாண்டி, முந்தைய ஆண்டைவிட 15.1 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் அனைத்து சந்தாதாரர்களையும் 5ஜி சேவைக்கு மாற்றுவது மற்றும் 6ஜி தொழில்நுட்ப தரநிலைகளில் இந்தியாவின் முன்னணி நிலையை வலுப்படுத்துவது ஜியோவின் இலக்கு என்று ஆகாஷ் அம்பானி தெரிவித்தார்.மேலும், இந்தியாவுக்கான சொந்த லோ எர்த் ஆர்பிட் (Low Earth Orbit – LEO) செயற்கைக்கோள் வலையமைப்பை உருவாக்கும் வாய்ப்பை ஜியோ ஆய்வு செய்து வருகிறது. அதே நேரத்தில், உலகின் முன்னணி செயற்கைக்கோள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதோடு, இந்தியாவில் தனது சொந்த தரை நிலைய (Ground Station) கட்டமைப்பையும் உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.

Related Posts