BREAKING

பொது

அதிருப்தியில் மேற்கு வங்க மக்கள்… சரியாக காய் நகர்த்தி வெற்றியை தட்டிச்சென்ற பாஜக

மேற்கு வங்கத்தில் இந்த முறை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கியுள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி (பாஜக), 294 இடங்களில் நடைபெற்ற தேர்தலில் 206 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மேலும், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாம் போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

இந்த தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்று பெண்களின் பாதுகாப்பில் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டைவிட்டதுதான். கடந்த இரண்டு–மூன்று ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிராக அதிகப்படியான குற்றங்கள் பதிவாகியுள்ளதாக NCRB வெளியிட்ட ஆய்வுகள் காட்டுகின்றன. கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொல்லப்பட்ட சம்பவம் மம்தா ஆட்சியில் பெரும் கரும்புள்ளியாக மாறியது. அதேபோல் பெண்களுக்கு எதிரான ஆசிட் தாக்குதல்களில் மேற்கு வங்கம் முதலிடத்தில் இருப்பதும் இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளிக்க காரணமாகியது.

அதுமட்டுமல்லாமல், 20 ஆண்டுகளாக திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்பட்ட பானிஹட்டி தொகுதியில், உயிரிழந்த கொல்கத்தா பெண் மருத்துவரின் தாயார் ரத்னா தேவநாத் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற SIR செயல்முறைக்கு பிறகு 90 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுவும் இந்த தேர்தல் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமின்றி, கடந்த 15 ஆண்டுகளில் பல ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் மீது சாட்டப்பட்டுள்ளன. இது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது, அதை பாஜக திறமையாக பயன்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தை குறிவைத்த பாஜக சரியாக அரசியல் காய்களை நகர்த்தியது. அதில் முதன்மையாக அவர்கள் கவனம் செலுத்தியது மத அடிப்படையிலான வாக்குகள். திரிணாமுல் காங்கிரஸ் மீதுள்ள அதிருப்தியை சரியாக பயன்படுத்திக் கொண்ட பாஜக, மால்டா மற்றும் முர்ஷிதாபாத் போன்ற முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக உள்ள பகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 3 முறை வெற்றி பெற்று 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸை பாஜக தோற்கடித்துள்ளது.

Related Posts