சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் களம் கண்ட திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியிடம் தோல்வியடைந்தார். ஒரு வாக்கு எவ்வளவு பெரிய வித்யாசத்தை ஏற்படுத்தும் என்பதை நாடே பார்த்துள்ளது. இந்நிலையில், இந்த வாக்கு வித்யாசம் குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சமீபத்திய மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் எப்படி பார்த்தலும் வியப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, இந்தத் தேர்தல்களின் மிகவும் மறக்க முடியாத ஒன்றாக இது இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூர் தொகுதியில், இரண்டு முன்னணி வேட்பாளர்களுக்கும் சேர்த்து 1,66,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. ஆனால், ஒரே ஒரு வாக்கினால் வரலாறு மாற்றப்பட்டது.”என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,வாக்கு எண்ணிக்கை குறித்த புகைப்படத்தை பகிர்ந்து, “இந்தப் புகைப்படம் நாட்டின் ஒவ்வொரு பள்ளியிலும், உலகம் முழுவதிலும் காட்டப்பட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு குழந்தையும், தாங்கள் வளரும்போது, ’ஒருவரின் சக்தி’ (the Power of One) என்பது மிகப்பெரிய சக்தி என்பதை புரிந்துகொள்வார்கள்” என்று ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.









