தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. மொத்தம் 108 தொகுதிகளில் தவெக வெற்றி வாகை சூடியுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் தவெகவினரை விஜய் நெறிப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் இணையத்தில் எழுந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியான நாளில், கொண்டாட்டங்கள் என்ற பெயரில் சில இளைஞர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் வேகமாக வட்டமடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நடந்துகொண்டனர். சில விபத்துகளும் ஏற்பட நேர்ந்தன. அதேபோல், விஜயை கொண்டாடி காணொளிகள் வெளியிடும் அவருடைய ஆதரவாளர்கள், மற்ற கட்சியினரை குறிப்பாக நாம் தமிழர் கட்சியினரை தரக்குறைவாக விமர்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதற்கிடையே , 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, 43வது வார்டு தவெக வட்ட செயலாளர் தினேஷ் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதே எங்களுடைய முதல் நோக்கம் என்று, விஜய் கூறியிருக்கும் நிலையில், அவருடைய கட்சி நிர்வாகியே பாலியல் குற்றச்சாட்டில் கைதாகியிருப்பது பேசுபொருளகியுள்ளது.
இந்த சம்பவம் மட்டுமல்ல, ராயபுரம் MLAவாக தேர்வாகியுள்ள விஜய் தாமு தேர்தல் வெற்றிகொண்டத்தில் 2 அடி நீளமுள்ள ஒரு வாளை வைத்து கேக் வெட்டியது சர்ச்சையாகியுள்ளது. அவர் கேக்கை வாளால் வெட்ட செல்லும்முன், தவெக நிர்வாகி லயோலா மணி அவரை தடுத்து “அது போல செய்யக்கூடாது” என்று எச்சரித்தபோதும், அதை கண்டுகொள்ளாமல் விஜய் தாமு வாளால் கேக்கை வெட்டியுள்ளார். இந்த காணொளி இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோல பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் தவெக நிர்வாகிகள் செயல்படுவதை உடனடியாக கண்டித்து, அவர்களை விஜய் நெறிப்படுத்தவேண்டும் என்று நெட்டிசென்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.









