தமிழ்நாடு சட்டமன்றத்தில், இன்று புதிய MLAக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது அதிமுகவினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுவது போன்று நடந்தவை அக்கட்சியின் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில், 108 தொகுதிகளில் வென்று தவெக வெற்றிபெற்றது. ஆட்சியில் இருந்த திமுக எதிர்கட்சியாக மாறியது. ஆனால், அதிமுக யாரும் எதிர்பார்த்திடாத வகையில், மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இந்த சரிவு, அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்டசபை தேர்தலில் அதிமுக 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட நிலையில், அதற்கு பொறுப்பேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பதவி விலகக்கோரி கட்சிக்குள் முக்கிய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சி.வி.சண்முகம், வேலுமணி ஆகியோர் சில MLAக்களை ஒன்றாக திரட்டி தனி ஆலோசனை நடத்தினர்.
இதற்கிடையே, விஜய்க்கு ஆதரவான நிலைபாடு எடுக்கக்கோரி அவர்கள் இருவரும் EPS-ஐ நிர்பந்தித்தாக கூறப்படுகிறது. மேலும், சட்டசபை குழு தலைவர் பதவிக்கு இனி EPS வரக்கூடாது என முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமல்லாமல், கட்சியின் பொது செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல், சட்டசபையின் அதிமுக குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த குழப்பங்கள் எல்லாம், இன்றைய பதவியேற்பு நிகழ்ச்சியில் வெளியே தெரியும்படியான சூழல் நிலவியது. வழக்கமாக இபிஎஸ் வரும்வரை காத்திருந்து அவருடன் சட்டசபைக்குள் நுழையும் அதிமுக MLAக்கள் இன்று இரண்டு குழுக்களாக சட்டசபைக்குள் சென்றனர்.
EPS-உடன் தளவாய் சுந்தரம், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கருப்பணன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட சிலர் சட்டமன்றத்துக்குள் வந்தனர். தோல்வி அடைந்த முனுசாமி, உதயகுமார் உள்ளிட்டோரும் EPS உடன் வந்தனர். இவர்களுக்கும் முன்னரே லீமா ரோஸ் உள்ளே சென்று விட்டார்.
EPS உள்ளே சென்றபிறகு வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் வந்தனர். அவர்களுடன் சில MLAக்களும் வந்தனர். இப்படி தனித்தனியாக சட்டசபைக்கு சென்ற இரு குழுக்களும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை.
அதேபோல, EPS MLAவாக பதவியேற்கும்போது சிலர் மட்டுமே மேஜையைத் தட்டி வரவேற்றனர். எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவின் பெரும்பாலான MLAக்கள் மேஜையை தட்டி வரவேற்றனர். இதில் இருந்தே உட்கட்சி பூசல் சட்டசபைக்குள்ளே வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேரவைக்கு வந்தும், MLAவாக பதவியேற்காமல் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.
இப்போது EPS அணியில் 22 MLAகளும், CV சண்முகம் – SP வேலுமணி அணியில் 25 MLA க்களும் இருக்கிறார்களாம். இத்தனை குளறுபடியும்,அதிமுகவில் மீண்டும் ஒரு பிளவா என்ற கேள்வியை அக்கட்சியின் தொண்டர்களிடையே எழுப்பியுள்ளது.









