பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சிபிஎஸ்இ பள்ளிகளில் மூன்றாவது மொழியை உடனடியாகக் கட்டாயப்படுத்தியுள்ள மத்திய கல்வி அமைச்சகத்திற்கு எதிராக குரல் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மத்திய அரசிற்கு எதிர்ப்பு
அண்ணாமலை தனது எக்ஸ் தள பதிவில், 2026 ஏப்ரலில் சிபிஎஸ்இ வெளியிட்ட மூன்று மொழிக் கொள்கையை தான் வரவேற்றதாகவும், அது இந்தியாவின் பல்வேறு மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை மாணவர்கள் அறிய உதவும் என்ற நம்பிக்கையில் ஆதரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பில் மூன்றாவது மொழி கட்டாயம் 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக இருந்ததாக அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
ஆனால் தற்போது, கடந்த மே 15ஆம் தேதி வெளியான புதிய சுற்றறிக்கையின் மூலம், 2026-27 கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியிருப்பது பெற்றோர்களுக்கு அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், முன்பே அறிவித்தபடி 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால், அண்ணாமலையின் இந்த நிலைப்பாடு அரசியல் ரீதியாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது. மத்திய அரசின் கல்விக் கொள்கையை பொதுவெளியில் விமர்சிக்கும் அளவுக்கு அவர் நகர்ந்திருப்பது, தமிழக அரசியலின் உணர்வுகளை புரிந்துகொண்ட அரசியல் முடிவா? அல்லது பாஜகவை விட்டு வெளியேறி தனிக்கட்சியை உருவாக்கும் முயற்சியா? என்ற கேள்வி எழுகிறது.
தனிக்கட்சி தொடங்குகிறாரா?
2024 தேர்தலில் மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறியது. இதன் விளைவாக பாஜக-பாமக கூட்டணியும் அதிமுக தனியாகவும் வாக்குகளை பிரித்ததில் திமுக 40/ 40 தொகுதிகளை வென்றது. மக்களவையில் அறுதி பெரும்பான்மையை பாஜக எட்டாத நிலையில் இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.
அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டிருந்தால் சில தொகுதிகளை கைப்பற்றி இருக்கலாம் என கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதனால் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதற்கு அண்ணாமலை தலைவராக இருப்பது தடையாக இருந்ததாகவும் இதனால் பாஜக தலைவராக, அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு வந்த நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் அதிமுகவுடன் பாஜக மீட்டமைத்த தேசிய ஜன்நாயக கூட்டணி சோபிக்காமலே போய்விட்டது. பாஜக வெறும் ஓரே ஒரு தொகுதியை மட்டும் வென்றது. இந்நிலையில் அண்ணாமையை புறக்கணித்தும் இந்த தோல்விக்கு ஒரு காரணம் என ரீல்ஸ்களே போடப்பட்டன. இந்த ரீல்களை பதிவிட்டவர்கள் பலரும் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் விளைவாக பாஜக தோற்றாலும் அண்ணாமலை மீதான நம்பிக்கை மக்களின் ஒரு பகுதியினருக்கு இன்னும் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அண்ணாமலை விரைவில் தனிக்கட்சி தொடங்கலாம் என அண்ணமலை கோஷ்டியினரிடையே தகவல் அடிபடுகிறது.
கொள்கையை மாற்றுகிறதா பாஜக?
அதே சமயத்தில், தமிழகத்தில் 1965ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக வெடித்த போராட்டம், மாநில அரசியலையே மாற்றியமைத்த வரலாறு கொண்டது. அப்போது காங்கிரஸ் அரசு இந்தி திணிப்பு விவகாரத்தை கையாண்ட விதம் கடும் எதிர்ப்பை உருவாக்கி, 1967 தேர்தலில் ஆட்சிமாற்றத்திற்கே வழிவகுத்தது. அந்த சரிவிலிருந்து தமிழக காங்கிரஸ் முழுமையாக மீள முடியவில்லை என்பது அரசியல் வரலாறு.
அந்த வரலாற்றுப் பின்னணியை புரிந்துகொண்டு, தமிழகத்தில் இந்தி திணிப்பை மென்மையாக பாஜக கையாள இருப்பதாகவும், இதன் குரலாகவே தற்போது அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து எனவும் பாஜகவின் மற்றொரு தரப்பில் பேச்சு அடிபடுகிறது.









