BREAKING

பொது

தமிழக அரசியலில் சினிமா ஆதிக்கம் செலுத்துவது ஏன்?

உலகெங்கும் போரும் நிச்சயமற்ற சூழலும் நிலவி வரும் இன்றைய கடுமையான அரசியல் சூழலில்கூட, நடிகர் ஒருவர் கட்சியைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் ஆவது சாத்தியமாகியுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் இதனை சாதித்துக் காட்டியிருக்கிறார்.

தமிழக அரசியலில் சினிமாவின் தாக்கம் என்பது வெறும் நடிகர்கள் கட்சி தொடங்குவதும், முதலமைச்சராகுவதும் மட்டுமே என்று பார்க்கப்படுகிறது. இதன் பின்னால் உள்ள நீண்டகால சமூக மாற்றங்களும் கட்டமைப்புகளும் கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் மட்டும் சினிமா அரசியலின் மைய சக்தியாக மாறியது ஏன்?

இதற்கான பதில் பிரிட்டிஷ் காலத்தில் இருந்து தொடங்குகிறது. தொழிற்துறை வளர்ச்சி, மொழி அடையாள அரசியல், திராவிட இயக்கம் மற்றும் கலாச்சார மாற்றங்கள் ஆகியவற்றோடு தமிழ் சினிமாவிற்கு நெருங்கிய தொடர்பு உள்ளது.

மெட்ராஸ்: தென்னிந்திய சினிமாவின் தலைநகர்

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மெட்ராஸ் தென்னிந்தியாவின் நிர்வாக மற்றும் தொழிற்துறை மையமாக வளர்ந்தது. ரயில்வே, துறைமுகம், அச்சுத்துறை, நாடக மேடைகள், பின்னர் திரைப்பட ஸ்டூடியோக்கள் ஆகியவை இங்கு குவிந்தன. இதன் விளைவாக தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள திரைப்படத் துறைகள் அனைத்தும் மெட்ராஸை மையமாகக் கொண்டு வளர்ந்தன.

பிரிட்டிஷ் இந்தியாவின் பல பகுதிகளில் விவசாயம் மற்றும் பண்டமாற்றுப் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்திய காலத்திலேயே தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் நகர்ப்புற தொழிலாளர் வர்க்கம் உருவாகத் தொடங்கியது. தினக்கூலி, வாரக்கூலி, மாதச் சம்பளம் பெறும் மக்கள் நாடகங்களையும் பின்னர் சினிமாவையும் ரசிக்கும் கலாச்சாரம் உருவானது. இதுவே சினிமாவை மக்கள் அரசியலின் ஊடகமாக மாற்ற உதவியது.

திராவிட இயக்கமும் திரைத்துறையும்

தனித்தமிழ் இயக்கம் சமஸ்கிருத கலப்பிலிருந்து தமிழை மீண்டும் தனித்து இயங்கும் மொழியாக்கியது. இதே காலத்தில் வளர்ந்த திராவிட இயக்கம், சினிமாவை அரசியலுடன் இணைத்த மிகப்பெரிய கருவியாக இருந்தது.

அறிஞர் அண்ணா நாடக ஆசிரியராக இருந்தார். கலைஞர் கருணாநிதி திரைப்பட வசனகர்த்தாவாகவும் கதை ஆசிரியராகவும் பணியாற்றினார்.

“சமூக நீதி”, “சாதி எதிர்ப்பு”, “தமிழ் மொழிப் பற்று”, “இந்தி எதிர்ப்பு” போன்ற கருத்துக்கள் நேரடியாக திரைப்படங்களில் புகுத்தப்பட்டன. இதன் மூலம் சினிமா வெறும் பொழுதுபோக்காக இல்லாமல், அரசியல் பிரச்சார கருவியாக மாறியது. அரசியல் கோஷங்களும் தமிழினப் பெருமைகளும் திரைப்பட வசனங்களாக மாறின.

1960களில் தமிழர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் வடஇந்திய கலாச்சார ஆதிக்கத்திற்கும், இந்தி மொழி ஆதிக்கத்திற்கும் எதிரான மனநிலையை உருவாக்கின. இது இந்தியா முழுக்க ஆதிக்கம் செலுத்தும் பாலிவுட் சினிமா தமிழ்நாட்டில் அடியெடுத்து வைப்பதையே கேள்விக்குள்ளாக்கியது. அதன் விளைவாக தமிழ் சினிமா தனித்த அடையாளத்துடன் வலுவடைந்தது.

நாயக பிம்பம்

சினிமா இயக்குநர்கள் மக்களின் கனவுகளையும் கோபங்களையும் திரைப்படங்கள் மூலமாக வெளிப்படுத்துகின்றனர். ஆனால், இதில் நடித்த நடிகர்களை வெறும் கலைஞர்களாகப் பார்க்காமல், சமூகத் தலைவர்களாக மக்கள் பார்க்கின்றனர்.

தமிழ்த்திரையுலகிலும் தமிழக அரசியலிலும் நாயக பிம்பத்தை ஏற்படுத்தியதில் எம்.ஜி.ஆரே முதன்மையானவர். தொடக்கத்தில் திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த அவர், நடித்த திரைப்படங்களில் ஏழைகளின் காவலனாக, நீதிக்காக போராடும் வீரனாக, பெண்களை காப்பாற்றுபவராக தன்னை கட்டமைத்துக் கொண்டார்.

1967 தேர்தலில் திமுக வெற்றி பெற எம்ஜிஆரின் சூறாவளி சுற்றுப்பயணமும் முக்கிய காரணமாக அமைந்தது. இது தமிழக அரசியலில் “நட்சத்திர பிரச்சாரம்” என்ற புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியது.

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு திமுக பிளவுபட்டு, எம்ஜிஆர் அண்ணா திமுகவை உருவாக்கினார். ஒரு பக்கம் வசனகர்த்தா கருணாநிதி, மறுபக்கம் நடிகர் எம்ஜிஆர் என்ற போட்டி தமிழக அரசியலை பல தசாப்தங்களுக்கு தீர்மானித்தது.

எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, கட்சியை யார் கைப்பற்றுவது என்ற போட்டி அவரது மனைவி ஜானகிக்கும் நடிகை ஜெயலலிதாவுக்கும் இடையே நடந்தது. ஜானகியைத் தாண்டி ஜெயலலிதா கட்சியை கைப்பற்றியதற்கு சினிமா உருவாக்கிய பிம்பமே பெரும் ஆதாரமாக இருந்தது.

ஆந்திராவில் என்.டி.ஆர்

தமிழகத்தில் திராவிட அரசியல் சினிமாவைப் பயன்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், ஆந்திராவில் என்.டி.ஆர் தெலுங்கு இனப்பெருமை வழியாக தனது பிம்பத்தை கட்டியமைத்தார்.

ராமர், கிருஷ்ணர் போன்ற புராண கதாபாத்திரங்களில் நடித்ததால், அவர் மக்கள் மனதில் தெய்வீக உருவமாக மாறினார். ஒரு கட்டத்தில் “தேவுடு என்.டி.ஆர்” என மக்களால் அழைக்கப்படும் அளவிற்கு மக்கள் தெய்வமாகிப் போனார். பின்னர் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கி ஆட்சியையும் கைப்பற்றினார்.

சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம், பவன் கல்யாணின் ஜன சேனா போன்றவை அந்த மரபில் உருவானவையே.

அரசியல் டு சினிமா

ஒரு பக்கம் சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்த கலாச்சாரம் இருந்தபோதிலும், அரசியலிலிருந்து சினிமாவுக்குச் சென்று நடிக்கும் பழக்கமும் உருவானது. இந்த கலாச்சாரத்தையும் திமுகதான் உருவாக்கியது.

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது இளமைக் காலத்தில் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். பின்னர் அவரது மகன் உதயநிதி முதலில் திரைப்பட நடிகராக மக்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டு அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார்.

விசிகவின் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் போன்றோர் கூட சினிமாவில் நடித்துள்ளனர். ஏன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முத்தரசன் கூட அரிசி எனும் சினிமாவில் நடித்தார். இது அரசியலுக்கு சினிமா புகழ் துணை நிற்கும் என்ற நம்பிக்கையிலானதே.

Related Posts