Kothari Industrial Corporation Ltd. (KICL) மற்றும் Tvasta Manufacturing Solutions ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஆஸ்திரேலியாவில் 3D கான்கிரிட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தை (3D Concrete Printing Technology) பயன்படுத்தி புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை தொடங்கியுள்ளன. இதற்காக இரு நிறுவனங்களுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று (24.04.2026) சென்னையில் கையெழுத்திடப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் நிலவி வரும் குடியிருப்பு பற்றாக்குறை காரணமாக வீட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனை சரிசெய்ய கோத்தாரி நிறுவனமும் மற்றும் Tvasta Manufacturing Solutions நிறுவனமும் இணைந்து ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளன. இந்த கூட்டாண்மை, இந்தியாவின் மேம்பட்ட 3D கான்கிரீட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆஸ்திரேலியாவின் வீட்டு வசதி பற்றாக்குறையை சமாளிக்கவும், வேகமான, குறைந்த செலவு மற்றும் அளவுகோலுக்கு ஏற்ற கட்டுமான தீர்வுகளை வழங்கவும் உதவும்.

100 ஆண்டுகளுக்கும் மேலான பல்வேறு தொழில்துறைகளில் வெற்றிகொடி நாட்டிவரும் KICL நிறுவனம் ஆஸ்திரேலியாவில் வாடிக்கையாளர்கள், முதலீடு மற்றும் local partnership-களை கவனித்துக்கொள்ளும். Tvasta நிறுவனம், தனது 3D கான்கிரீட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக வீடுகளை விரைவாக கட்டும் வேலைகளை செயல்படுத்தும்.
இந்தியாவில் உருவான தொழில்நுட்பங்களை உலகளவில் பயன்படுத்தும் ஒரு பெரிய வாய்ப்பாக இந்த திட்டம் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. பல துறைகளில் வளர்ச்சி கண்ட KICL நிறுவனத்திற்கு, கட்டுமான துறையிலும் இது புதிய அத்தியாயமாக இருக்கும்.
கோத்தாரி நிறுவனத்தின் தலைவர் ஜே. ரஃபிக் அகமது கூறியதாவது: 1917 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கோத்தாரி நிறுவனம், இன்று உலகளவில் முதலீடுகளை ஈர்க்கும் பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளது. தமிழக தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துடன் (DOTE) இணைந்து, இத்தாலி மற்றும் பிரான்ஸ் நிபுணர்களின் உதவியுடன், இந்திய மாணவர்களுக்கு உலகத் தரத்தில் காலணி வடிவமைப்பு பயிற்சிகள் (Footwear Design & Production) வழங்க கோத்தாரி நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது.

அதேபோல், மதுரையில் உள்ள ட்ரோன் பயிற்சி மையத்தில், விரைவில் பெண்களுக்கு இலவசமாக ட்ரோன் பைலட் பயிற்சி வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
“இதேபோல், ஆஸ்திரேலியாவில் பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். அதை பார்த்து ஆஸ்திரேலிய அரசு நமக்கு முழு ஆதரவு தரும். உள்ளூர் மதிப்பு உருவாக்கம் (Local value creation) என்பது மிக முக்கியம், அதில் நாங்கள் நிச்சயம் கவனம் செலுத்துவோம். லாபத்தை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், வேலைவாய்ப்பு உருவாக்கி சமூக முன்னேற்றத்தை கவனத்தில் கொண்டு கோத்தாரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.
இதில் பேசிய CEO Tvasta Manufacturing Solutions நிறுவனத்தின் சிஇஒ அதித்யா VS, “ஆஸ்திரேலியாவில் 3D கான்கிரீட் பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல KICL நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா மற்றும் அமெரிக்காவில் ஏற்கனவே வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதால், இந்த கூட்டாண்மை வீட்டு வசதி செலவு சவால்களை சமாளிக்கவும், எங்கள் தீர்வுகளை உலகளவில் விரிவாக்கவும் முக்கிய பங்கு வகிக்கும் என நம்புகிறோம்.”
பின்னர் பேசிய Indo-Australian Chamber of Commerce-ன் சிஇஒ மெரின் தேவாசியா, “ஆஸ்திரேலியாவின் வீட்டு வசதி பிரச்சனையை சமாளிக்க புதிய தொழில்நுட்பங்கள் அவசியம். KICL மற்றும் Tvasta இடையேயான இந்த கூட்டாண்மை, இந்தியா–ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பில் புதிய அத்தியாயமாக இருக்கும். இந்தியாவின் புதிய தொழில்நுட்பங்கள் உலகளாவிய சவால்களை சமாளிக்க முடியும் என்பதை இது நிரூபிக்கிறது.”









