நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பிரஸ்மீட் வைத்து பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ரவி மோகன்-ஆர்த்தி இருவருக்கும் பிரிந்து வாழ்கிறார்கள். இதற்கிடையே, பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனை தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்தன. இணையத்தில் அவர்கள் இருவரையும் குறித்து பல்வேறு தரக்குறைவான விமர்சனங்கள் எழுந்துவந்தநிலையில், ரவிமோகனைவிட்டு பிரிவதாக கெனிஷா தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து கடந்த மாதம் 16 ஆம் தேதி ரவிமோகன் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது உணர்ச்சிவசப்பட்டு ரவிமோகன் பேசினார்.
“என் குழந்தைகளை பார்க்க விடுவதில்லை. பள்ளிக்கு கூட பாதுகாவலர்கள் உடன் அனுப்புகிறார்கள். அந்த வாழ்க்கை வேண்டாம் என தெறித்து ஓடி வந்தேன்.ஒரு பெண் என்னை புரிந்துகொண்டு வந்தார். இப்போது அவரையும் (கெனிஷா) காலி செய்து அனுப்பிவிட்டார்கள். நான் பார்க்காத நடிகைகளா? எனக்கு நடந்தது மிகப்பெரிய அநியாயம். ஒருத்தர் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை கெடுத்தார். ஒரே நாளில் என்னால் விவாகரத்து செய்திருக்க முடியும். என் குழந்தைகளுக்காக அமைதி காத்தேன்” என செய்தியாளர்களிடம் ரவிமோகன் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மன்னிப்பு கேட்டு பத்திரிகையில் அவர் பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், “யாருக்கெல்லாம் சம்பந்தப்பட்டதோ அவர்களுக்கு, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் 23.05.2025 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, நிலுவையில் உள்ள திருமணத் தகராறு தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக் கொருவர் எதிராக பொதுவெளியில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.எனினும், 16.05.2026 அன்று நான் வழங்கிய பத்திரிகையாளர் சந்திப்பில், எனது திருமணத் தகராறு தொடர்பாக சில கருத்துகளை வெளியிட்டேன். அவை மேற்கண்ட நீதிமன்ற உத்தரவுக்கு முரணானவையாக இருந்தன.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதற்காக நான் மனப் பூர்வமாக மன்னிப்பு கோருகிறேன். மேலும், அந்தப் பத்திரிகையாளர் சந்திப்பின் போது நான் வெளியிட்ட கருத்துகளால் மனவேதனை அடைந்திருக்கக்கூடிய அல்லது ஏதேனும் விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய அனைவரிடமும் எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.








