IPL 2026 சீசனில் கோப்பையை வென்ற RCB அணியை விட அதிகமாக பேசப்படுபவர் RR அணியின் புயல் வைபவ் சூர்யவன்ஷிதான்.
15 வயதில், பல சர்வதேச நட்சத்திரங்கள் விளையாடும் தொடரில், ஒரு பள்ளி மாணவன் போல இருக்கும் வீரர் வந்து முழு சீசனையும் தன் வசம் வைத்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய சூர்யவன்ஷி, 16 இன்னிங்ஸ்களில் 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார். அதுவும் 237.30 என்ற நம்ப முடியாத ஸ்டிரைக் ரேட்டில். IPL வரலாற்றில் மிகச் சிறந்த அதிரடி சீசன்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, 72 சிக்ஸர்கள் அவர் விளாசியிருக்கிறார். IPL வரலாற்றில் ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனையையும் அவர் முறியடித்தார். பல ஆண்டுகளாக கிறிஸ் கேல் பெயரில் இருந்த சாதனையை 15 வயது சிறுவன் உடைத்தது உலக கிரிக்கெட் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி வெறும் ஆரஞ்சு கேப் மட்டுமல்லாமல் MVP, Emerging Player, Super Striker, Super Sixes உள்ளிட்ட ஐந்து முக்கிய விருதுகளை வென்று IPL வரலாற்றில் புதிய சாதனையும் படைத்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா, ஹார்திக் பாண்ட்யா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் IPL மூலம் இந்திய அணிக்குள் நுழைந்தனர். தற்போது அதே பாதையில் வேகமாக வைபவ் சூர்யவன்ஷி நகர்கிறார். ஏற்கனவே இந்தியா A அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான சாத்தியமான இந்திய அணியிலும் அவரது பெயர் பேசப்படுகிறது.
சுனில் கவாஸ்கர் அவரை “International Ready” என்று கூறியுள்ளார். குமார் சங்கக்காரா “இந்திய அணிக்கான அழைப்பு வெகு தூரத்தில் இல்லை” என்று தெரிவித்துள்ளார். மறுபுறம் சில முன்னாள் வீரர்கள் வயது வெறும் 15 என்பதால் அவசரப்பட வேண்டாம் என்று கருத்து தெரிவிக்கின்றார்கள்.
776 ரன்கள், 72 சிக்ஸர்கள், 237 ஸ்டிரைக் ரேட், ஐந்து விருதுகள், ஆரஞ்சு கேப் என இத்தனை சாதனைகளுக்குப் பிறகு இந்திய தேர்வாளர்கள் அவரை கவனிக்காமல் இருக்க முடியாது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.








