திருச்செந்தூர் கோவிலில் சுவாமி தரிசனத்திற்காக அமைச்சர் ரமேஷ் மற்றும் அவரது உதவியாளரிடம் ரூ.4 ஆயிரம் லஞ்சமாக பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல கோவில்களில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு தனிக்கட்டணம் இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் தனியாக இருந்தாலும், சில கோவில்களில் முறைகேடாக அதிக பணம் வாங்கப்படுகிறது. ‘அதிகப்பணம் கொடுப்பவர்கள் சாமி சிலையை அருகில் பார்க்க முடியும்’ என்பது எழுதப்படாத சட்டம் போல சில கோவில்களில் இருக்கிறது.
இந்நிலையில், இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள ரமேஷ் பல்வேறு கோவில்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், அமைச்சர் ரமேஷ் இன்று ஆய்விற்காக சென்றிருக்கிறார். ஆனால் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், சாதாரணமாக உடையணிந்து பொதுமக்களில் ஒருவராக உள்ளே சென்றிருக்கிறார்.அவரது உதவியாளரை அனுப்பி சிறப்பு தரிசனத்திற்கு டிக்கெட் வாங்கிவர கூறியிருக்கிறார். அப்போது, அர்ச்சகர் ஒரு ஆளுக்கு 2000 ரூபாய் எனக்கூறி, அமைச்சர் மற்றும் அவரது உதவியாளரிடம் 4000 ரூபாய் வாங்கியிருக்கிறார். அதையும் GPay மூலம் அமைச்சரின் உதவியாளர் அனுப்பியிருக்கிறார். இந்த சம்பவங்களுக்கு பிறகே அமைச்சர் ரமேஷ் தான் யார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பின்னர் அர்ச்சகர்களை கண்டித்த அமைச்சர், அர்ச்சகர்கள் கைப்பட விளக்க கடிதமும் எழுதி வாங்கியிருக்கிறார். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்கள் மீது, எந்த பாரபட்சமும் பார்க்காமல் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அமைச்சர் ரமேஷ் உறுதியளித்துளளார்.
சில தினங்களுக்கு முன் திருச்சி கோவிலில் ஆய்வு செய்த பிரசாதங்களில் காலாவதி தேதி குறிப்பிடவில்லை என கூறி, தமிழகம் முழுவதும் உள்ள கோவில் பிரசாதங்களில் காலாவதி தேதி கட்டாயம் என்ற உத்தரவை அமைச்சர் ரமேஷ் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.









