BREAKING

விளையாட்டு

தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் தீர்ப்பு… 9 பேரும் குற்றவாளிகள்!

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் – மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறையைச் சேர்ந்த 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சம்பவம் நடந்தபோது சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பெண் போலீசார் ரேவதி, பியூலா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் சாட்சியம் அளித்தனர்.

கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து மொத்தம் 100-க்கும் மேற்பட்ட சாட்சிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.வந்தது. கைதானவர்கள் தங்களுக்கு ஜாமீன் கோரி மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டுகளில் தாக்கல் செய்த மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

இந்த வழக்கில் முதற்கட்டமாக 2027 பக்க குற்றப்பத்திரிகையும், இரண்டாம் கட்டமாக 400 பக்க குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும், குறுக்கு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், இன்று நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில், “தந்தை, மகன இருவருக்கும் காவல் துறையினரால்தான் காயங்கள் ஏற்பட்டது ஊர்ஜிதமாகி உள்ளது; இருவரையும் காவல் துறை வாகனத்துக்கு பதில் தனியார் வாகனத்தில் அழைத்துச் சென்றது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், “நாம் அடித்து பழகுவதற்கு அப்பா மகன் கிடைத்துள்ளனர், இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக்கொள்வோம் என காவல்துறையினர் பேசியுள்ளனர்; தந்தை, மகன் உடலில் இருந்த காயங்கள் மரணங்களை விளைவிக்க கூடிய காயங்கள் என்பது கூராய்வு முடிவில் தொியவந்துள்ளது; ரத்தக்கறையுடன் இருந்த ஆடைகளை ஜெயராஜ் உறவினா்களிடமே கொடுத்து குப்பைத்தொட்டியில் போடச்சொல்லி இருக்கிறாா்கள்; வழக்கில் இருந்த அனைத்து தடயங்களையும் காவலா்கள் அழித்துள்ளதை சிபிஐ உறுதி செய்துள்ளது. இந்த மரணங்கள் கொலைதான் என தடய அறிவியல் ஆய்வும் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்ளிட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள். தண்டனை விவரம் வரும் 30ஆம் தேதி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts