நேபாள நாட்டில், சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து அரசை எதிர்த்து இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் 16 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆன்லைன் தளங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை நேபாள் நாட்டின் உச்சநீதிமன்றம் வெளியிட்டிருந்தது. அதன்படி நேபாளில் இயங்க விரும்பும் சமூக வலைத்தளங்கள் அந்த நாட்டின் அரசிடம் பதிவு செய்யவேண்டும். அதற்கு 7 நாள் அவகாசமும் விதிக்கப்பட்டிருந்தது. அவகாசம் முடிவடைந்தும், பேஸ்புக் (Facebook), வாட்ஸாப் (Whatsapp), இன்ஸ்டாகிராம் (Instagram), யு டியூப் (YouTube), எக்ஸ் (X), லிங்க்டுஇன் (LinkedIn) உள்ளிட்ட நிறுவனங்கள் பதிவு செய்யாமல் இருந்தன.
இதனால் அந்நாட்டு தொலைத்தொடர்பு துறை அமைச்சகம், பதிவு செய்யாத சமூக ஊடகங்களை முடக்கி உத்தரவிட்டது. நேபாள் நாட்டின் இந்த முடிவுக்கு gen z எனப்படும் 2K கிட்ஸ் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து, அந்நாட்டின் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதயைனடுத்து தெருக்களில் ஒன்று கூடுவதற்கு அரசு தடை விதித்தது. சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும் தடையை மீறி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்ற வளாகத்திலும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்த போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர்.
போராட்டத்தின்போது மரக்கட்டைகளையும், தண்ணீர் பாட்டீல்களையும் போலீசார் மீது வீசியதுடன், அரசுக்கு எதிராக இளைஞர்கள் கோஷம் எழுப்பினர். பாராளுமன்ற கட்டிடத்தின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தீவைத்தனர். போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர ரப்பர் வெடிகுண்டு, கண்ணீர் புகை குண்டுகளை, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாதுகாப்பு படையினர் அவர்களை விரட்டினர். இந்த மோதலில், மோதலில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.









