மண்டி மாவட்டம்: இமாச்சலப்பிரதேசத்தின் பல பகுதிகளில் கடுமையான பருவமழை தொடர்ந்து பெய்துவருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் நிலச்சரிவு, வெள்ளம் போன்றவை ஏற்பட்டுள்ளன. மக்கள் பேரச்சத்துடன் வாழும் சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், மண்டி மாவட்டத்தில் உள்ள சியாத்தி என்ற கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம் சோகத்தோடு அதிசயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாய் சத்தத்தால் உயிர் தப்பிய மக்கள்
ஜூன் 30-ஆம் தேதி நள்ளிரவில், சியாத்தி கிராமத்தில் ஒரு நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்தது. இது ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் குரைத்தது, இந்த நாயின் சத்தத்தைக் கேட்ட மக்கள் தூக்கத்திலிருந்து விழித்து வெளியே வந்தனர்.
வீட்டுச் சுவரில் பெரிதான விரிசல்கள் தென்பட்டன. நிலம் மெதுவாகச் சரியத் தொடங்கியது. உடனடியாக 65-க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் அங்கு இருந்து வெளியேறினர்.
அடுத்த நிமிடமே… கிராமமே தரைமட்டம்
மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறிய சில நிமிடங்களில், சியாத்தி கிராமம் முழுவதும் நிலச்சரிவால் தரைமட்டமானது. 20க்கும் மேற்பட்ட வீடுகள் பாழடைந்தன. எதையும் மீட்க முடியாத அளவிற்கு மண் மூடியது.
“நாய் எச்சரித்ததே காரணம்” – கிராமவாசி பகிர்வு
அந்த கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரா கூறுகையில், “அந்த இரவில் கடுமையான மழை பெய்தது. நாயின் குரல் அடிக்கடி கேட்க, என்ன நடந்திருக்கும் என வெளியே வந்தேன். சுவரில் பெரிய விரிசலும், வீட்டில் தண்ணீர் ஊறுவதும் கண்டு, உடனே அனைவரையும் எழுப்பி வெளியே அனுப்பினேன்,” எனத் தெரிவித்தார்.
அதையடுத்து அவர் அருகிலுள்ள வீடுகளுக்கும் தகவல் அளித்தார். அனைவரும் ஒன்றாகப் பாதுகாப்பான இடத்துக்குச் சென்றனர்.
தற்காலிக முகாமில் வாழும் மக்கள்
தற்போது உயிர் தப்பிய 65 பேர், அருகிலுள்ள திரியம்பாலா கிராமத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் அரசு ஏற்படுத்திய தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏழு நாட்களாக அவர்கள் அங்கு உள்ளனர். வீடுகளை இழந்ததாலும், அனுபவித்த அதிர்ச்சியாலும் மன அழுத்தத்தில் உள்ளனர்.
அருகிலுள்ள கிராம மக்கள் உணவு, ஆடைகள் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். மாநில அரசு சார்பில், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மழை வெள்ள நிவாரண நிதி குறித்து எம்பி கங்கனா ரணாவத்,
மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு நிவாரண உதவிக்காக நிதி இல்லை என கூறிய பாஜக எம்.பி. கங்கனா ரணாவத், பிறகு சமீபத்திய பேட்டியில் “நான் மக்களின் குறைகளை தெளிவாக முன்வைக்கிறேன். எனது மக்களவைத் தொகுதி மக்களின் வலியை பிரதிநிதித்துவப்படுத்துவது எனது கடமை” என தெரிவித்தார்.









