BREAKING

பொழுதுபோக்கு

பூதாகரமாகும் விஜய்-சங்கீதா விவகாரம்.. தேர்தல் நேரத்தில் புதிய சிக்கல்..

வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் இந்த பிரச்னையை சங்கீதா கிளப்பியிருப்பதாக விஜயின் ஆதரவாளர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர். #Westandwithvijay என ஹாஸ்டாக் ட்ரெண்ட் ஆகிவருகிறது. அதேபோல், சங்கீதாவை விஜய் ஏமாற்றி இருப்பதாகவும், இதற்கு விஜய் பதில் சொல்லியே ஆகவேண்டுமென்றும் கூறி, #justiceforsangeetha என்ற ஹாஸ்டாக்கும் ட்ரெண்ட் ஆகிவருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த சிக்கல் விஜயின் அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

தவெக தலைவரும் நடிகருமான விஜ​யிட​மிருந்து விவாகரத்து கோரி அவருடைய மனைவி சங்​கீதா செங்கல்பட்டு நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்தார். அந்த மனுவை விசா​ரித்த முதன்மை அமர்வு நீதி​மன்​றம், வழக்கை குடும்ப நல நீதி​மன்​றத்​துக்கு மாற்றி உத்​தர​விட்​டது. இந்த மனு வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சங்கீதா. தனது இளம்வயதில் விஜயின் தீவிர ரசிகையாக இருந்த சங்கீதா, விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய நிச்சயதார்த்தம், 1998, ஜூலை 10ல் லண்டனில் நடந்தது; அங்கேயே பதிவு திருமணமும் செய்தனர். பின்னர் 1999 ஆகஸ்ட் மாதம், சென்னையில் விஜய் -சங்கீதாவின் திருமணம் மீண்டுமொரு முறை நடந்தது. இவர்களுக்கு,ஜேசன் சஞ்​சய்​ (25) என்ற மகன், திவ்யா சாஷா(20) என்ற மகள் இருக்கின்றனர்.

இந்நிலையில், விஜயுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி சங்கீதா மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தொடக்கத்​தில் எங்​களது இல்லற வாழ்க்​கை​யில் பிரச்சினையின்றி சுமூக​மாக சென்​றது. படப்​பிடிப்பு இல்​லாத கால​கட்​டங்​களில் நாங்​கள் குடும்​பத்​துடன் இங்​கிலாந்​துக்கு சென்​று​விடு​வோம்.

அதே​போல நானும் படப்​பிடிப்பு தளங்​களுக்​கும், திரைப்​படங்​கள் தொடர்​பான நிகழ்​வு​களி​லும் பங்கேற்றுள்ளேன். சில நேரங்​களில் எங்​களுக்​குள் அவ்​வப்​போது சிறுசிறு பிரச்​சினை​கள் ஏற்​பட்​டாலும் அதை நாங்​களே சரிசெய்​து​கொண்டு வாழ்க்கையை சீராக நடத்தி வந்​தோம்.

ஆனால் கடந்த 2021 ஏப்​ரல் மாதம் எனது கணவருக்​கும், ஒரு நடிகைக்​கும் திரு​மணத்தை மீறிய தொடர்பு இருந்தது தெரிய​வந்​தது. இதனால் மனதள​வில் பாதிப்​படைந்​தேன். அதன்​பிறகு அந்த உறவைத் துண்​டித்து விடுவ​தாக விஜய் உறு​தி​யளித்தார்.

ஆனால் அதன்​படி அவர் நடந்துகொள்​ள​வில்​லை. இந்​தப் பிரச்​சினையை சுமூக​மாகப் பேசி ஒரு முடிவுக்கு கொண்டுவர எடுத்த முயற்​சிகள் எது​வும் பலனளிக்​க​வில்​லை. குழந்​தைகள் எதிர்காலம் கருதி நானும் அமைதிகாத்து வந்​தேன். ஆனால் விஜய் என்​னுடன் இருந்த திருமண பந்​தத்தை அறவே துண்​டித்​துக் கொண்​ட​தால் மனரீதி​யாக​வும், உடல் ரீதி​யாக​வும் பாதித்து தனிமைப்​படுத்​தப்​பட்​டேன்.

இந்​நிலை​யில் மனைவி என்ற முறை​யில் எனக்​கும், குடும்​பத்​துக்​கும் வழங்கி வந்த அனைத்து நிதி உதவிகளையும் எனது கணவர் விஜய் நிறுத்தி விட்​டார். தற்​போது எங்​களுக்​குள் எந்த உறவும் இல்​லை. எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்​டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

விஜய் -சங்கீதா விவகாரம் குறித்து பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கேட்டபோது, ” இந்த விவகாரத்தை பொறுத்தவரை விஜய், அவரது மனைவி சங்கீதா, நீதித்துறை ஆகிய 3 பேருக்கும் சம்பந்தப்பட்டது. அதுவும் தனிப்பட்ட மனிதருக்கான, தனிப்பட்ட வாழ்க்கை விஷயம். அரசியல் ரீதியாக இதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. எப்போதுமே அரசியலுக்கு வந்துவிட்டால் தீப்பந்தத்துக்குள் நுழைந்து வெளியே வருவது மாதிரி தான். அதுவரை தோண்டப்படாத தனிப்பட்ட வாழ்க்கையையும் தோண்டுவார்கள். இது விஜய்க்கு மட்டுமல்ல, எல்லா தலைவர்களுக்கும் இருந்ததுதான்.

அரசியலுக்கு வரும் போதே இதை விஜய்யும் உணர்ந்தே வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதையும் கடந்துதான் அவர் போக வேண்டும். இதையும் தாண்டிதான் அவரது அரசியல் இருக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்து மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்பது எல்லாம் தேர்தலில்தான் தெரிய வரும்” என்றார்.

 

Related Posts