வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் இந்த பிரச்னையை சங்கீதா கிளப்பியிருப்பதாக விஜயின் ஆதரவாளர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர். #Westandwithvijay என ஹாஸ்டாக் ட்ரெண்ட் ஆகிவருகிறது. அதேபோல், சங்கீதாவை விஜய் ஏமாற்றி இருப்பதாகவும், இதற்கு விஜய் பதில் சொல்லியே ஆகவேண்டுமென்றும் கூறி, #justiceforsangeetha என்ற ஹாஸ்டாக்கும் ட்ரெண்ட் ஆகிவருகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த சிக்கல் விஜயின் அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தவெக தலைவரும் நடிகருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி அவருடைய மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கை குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த மனு வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த தொழில் அதிபரின் மகள் சங்கீதா. தனது இளம்வயதில் விஜயின் தீவிர ரசிகையாக இருந்த சங்கீதா, விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய நிச்சயதார்த்தம், 1998, ஜூலை 10ல் லண்டனில் நடந்தது; அங்கேயே பதிவு திருமணமும் செய்தனர். பின்னர் 1999 ஆகஸ்ட் மாதம், சென்னையில் விஜய் -சங்கீதாவின் திருமணம் மீண்டுமொரு முறை நடந்தது. இவர்களுக்கு,ஜேசன் சஞ்சய் (25) என்ற மகன், திவ்யா சாஷா(20) என்ற மகள் இருக்கின்றனர்.
இந்நிலையில், விஜயுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து கோரி சங்கீதா மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தொடக்கத்தில் எங்களது இல்லற வாழ்க்கையில் பிரச்சினையின்றி சுமூகமாக சென்றது. படப்பிடிப்பு இல்லாத காலகட்டங்களில் நாங்கள் குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு சென்றுவிடுவோம்.
அதேபோல நானும் படப்பிடிப்பு தளங்களுக்கும், திரைப்படங்கள் தொடர்பான நிகழ்வுகளிலும் பங்கேற்றுள்ளேன். சில நேரங்களில் எங்களுக்குள் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை நாங்களே சரிசெய்துகொண்டு வாழ்க்கையை சீராக நடத்தி வந்தோம்.
ஆனால் கடந்த 2021 ஏப்ரல் மாதம் எனது கணவருக்கும், ஒரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் மனதளவில் பாதிப்படைந்தேன். அதன்பிறகு அந்த உறவைத் துண்டித்து விடுவதாக விஜய் உறுதியளித்தார்.
ஆனால் அதன்படி அவர் நடந்துகொள்ளவில்லை. இந்தப் பிரச்சினையை சுமூகமாகப் பேசி ஒரு முடிவுக்கு கொண்டுவர எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. குழந்தைகள் எதிர்காலம் கருதி நானும் அமைதிகாத்து வந்தேன். ஆனால் விஜய் என்னுடன் இருந்த திருமண பந்தத்தை அறவே துண்டித்துக் கொண்டதால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதித்து தனிமைப்படுத்தப்பட்டேன்.
இந்நிலையில் மனைவி என்ற முறையில் எனக்கும், குடும்பத்துக்கும் வழங்கி வந்த அனைத்து நிதி உதவிகளையும் எனது கணவர் விஜய் நிறுத்தி விட்டார். தற்போது எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. எனவே எனக்கு விவாகரத்து வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

விஜய் -சங்கீதா விவகாரம் குறித்து பா.ஜ.க. முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் நிருபர்கள் கேட்டபோது, ” இந்த விவகாரத்தை பொறுத்தவரை விஜய், அவரது மனைவி சங்கீதா, நீதித்துறை ஆகிய 3 பேருக்கும் சம்பந்தப்பட்டது. அதுவும் தனிப்பட்ட மனிதருக்கான, தனிப்பட்ட வாழ்க்கை விஷயம். அரசியல் ரீதியாக இதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. எப்போதுமே அரசியலுக்கு வந்துவிட்டால் தீப்பந்தத்துக்குள் நுழைந்து வெளியே வருவது மாதிரி தான். அதுவரை தோண்டப்படாத தனிப்பட்ட வாழ்க்கையையும் தோண்டுவார்கள். இது விஜய்க்கு மட்டுமல்ல, எல்லா தலைவர்களுக்கும் இருந்ததுதான்.
அரசியலுக்கு வரும் போதே இதை விஜய்யும் உணர்ந்தே வந்திருப்பார் என்று நினைக்கிறேன். இதையும் கடந்துதான் அவர் போக வேண்டும். இதையும் தாண்டிதான் அவரது அரசியல் இருக்கிறது. இவற்றை எல்லாம் பார்த்து மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஏற்றுக்கொள்ள மாட்டார்களா? என்பது எல்லாம் தேர்தலில்தான் தெரிய வரும்” என்றார்.








