தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, AIADMK தலைமையிலான NDA கூட்டணியில் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டார். இதில், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமகக்கு 18 தொகுதிகளும், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுகக்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருந்தாலும், தனித்தனி பகுதிகளில் தங்களுக்கென செல்வாக்கை கொண்டுள்ளன.
பாமக போட்டியிடும் 18 தொகுதிகளில் பெரும்பாலானவை வட தமிழகத்தின் வன்னியர் ஆதிக்கம் உள்ள பகுதிகள்தான். சேலம், தருமபுரி, பென்னாகரம், விக்கிரவாண்டி, செஞ்சி போன்ற இடங்களில் பாமகக்கு ஒரு நிலையான ஆதரவு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் நகர்ப்புற பகுதிகளான அம்பத்தூர், பெரம்பூர் போன்ற இடங்களில் அந்த ஆதரவு குறைவாக இருக்கும்.
மற்றொரு பக்கம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் 11 தொகுதிகளில் தென் மற்றும் டெல்டா மாவட்டங்கள் அதிகமாக உள்ளன. மன்னார்குடி, பெரியகுளம், திருவையாறு போன்ற இடங்களில் அமமுகக்கு ஒரு அளவு செல்வாக்கு இருக்கு. ஆனால் சென்னை போன்ற நகர்ப்புற தொகுதிகளில் அந்த தாக்கம் குறைவாகவே உள்ளது.
இந்நிலையில், சசிகலா தொடங்கிய AIPTMMK மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாமக பிரிவு இணைந்து புதிய கூட்டணியை சமீபத்தில் அமைத்துள்ளது. சசிகலா மற்றும் ராமதாஸ் இருவரும் தங்களுக்கென குறிப்பிட்ட சமூக ஆதரவுகளை வைத்திருந்தாலும், அவை முழுமையாக வாக்குகளாக மாறுமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் தேவர் சமூகத்தில் சசிகலாவுக்கு ஒரு அளவு செல்வாக்கு உள்ளது. அதேபோல், வட மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தில் ராமதாஸ் குடும்பத்தின் தாக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனால் ராமதாஸ் மற்றும் சசிகலா ஒருபுறம், அன்புமணி ராமதாஸ் மற்றும் டி.டி.வி.தினகரன் மறுபுறம் மோதும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வாக்குகள் இரண்டாகப் பிளவுபடும் வாய்ப்பு அதிகமாக இருக்கு.
பாமக மற்றும் அமமுக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறுவதே சசிகலா – ராமதாஸ் கூட்டணியின் முக்கிய குறிக்கோளாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த 29 தொகுதிகளில் நட்சத்திர வேட்பாளர்களை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தரப்பு பேசி வருகிறனர். இதனால் வன்னியர் மற்றும் தேவர் சமூக வாக்குகள் ஒரே திசையில் செல்லாமல் இரண்டாகப் பிரியும். ஒரே கட்சிக்கு சென்றிருக்க வேண்டிய வாக்குகள் இரண்டு அணிகளுக்கு பகிரப்பட்டு, மொத்த வாக்கு வங்கி குறையும்.
இந்த பிளவு நேரடியாக பெரிய கட்சிகளுக்கு ஆதாயமாக அமையும். குறிப்பாக, இந்த பகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் திமுக கூட்டணிக்கு இது சாதகமாக இருக்கும். ஏனெனில், எதிரணி வாக்குகள் பிளவுபடும் போது, குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
மேலும், கடந்த தேர்தல் தரவுகளைப் பார்க்கும்போது, 15% க்கும் குறைவான வாக்கு வங்கியுடன் போட்டியிடும் கட்சிகள் வெற்றி பெறுவது ரொம்பவே கடினம். இதனால், பாமக மற்றும் அமமுக ஆகியவை பிளவுபட்ட நிலையில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு குறையும்.
இதுமட்டுமின்றி, விஜய் தொடங்கிய தவெக கட்சியும் இந்த தேர்தலில் களமிறங்கும் நிலையில், இளைஞர்கள் மற்றும் பெண்கள் வாக்குகளிலும் பிளவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால், இந்த தேர்தல் பாமக மற்றும் அமமுக போன்ற கட்சிகளுக்கு மிகவும் சவாலாக இருக்கும்








