BREAKING

பொது

கேரளா – புதுச்சேரி தேர்தல்.. இந்த முறை எப்படி இருக்கு?

இந்தியாவின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம், வரவிருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்கள். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் பல கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்டமாக, கேரளா மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

கேரளா களம் எப்படி இருக்கு?

கேரளாவில் மொத்தம் 140 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க 71 இடங்கள் தேவை என்ற நிலையில், கடந்த 2021 தேர்தலில், இடதுசாரி கூட்டணி (LDF) 99 இடங்களை வென்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான UDF 41 இடங்களை பெற்றது. LDF-இன் அந்த வெற்றி ஒரு வரலாற்று வெற்றியாக கருதப்பட்டது. அதற்கு, முக்கிய காரணம், கேரளாவில் நிலவி வந்த அரசியல் சூழல். ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் மட்டுமே நிலையாக இருந்தது. இந்த முறை UDF என்றால், அடுத்த முறை LDF என இருந்த நிலை கடந்த தேர்தலில் மாறியது. தொடர்ச்சியாக, இரண்டாவது முறை LDF கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்த முறையும் LDF கூட்டணி வெற்றிபெற்று, ஹாட்ரிக் அடிக்குமா என்பது கேள்வியாக இருக்கிறது.

மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, Kerala Infrastructure Investment Fund Board Fund Board மூலம் கட்டபட்டுள்ள மேம்பாலங்கள், லைஃப் மிஷன் திட்டம், வேலையில்லா மகளிர், திருநங்கைகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் ஸ்த்ரீ சுரக்ஷா (Sthree Suraksha) திட்டம், மாநிலத்தில் கல்வி வளர்ச்சி, சுகாதார மேம்பாடு ஆகியவற்றை மக்களிடம் கூறி LDF வாக்கு சேகரித்து வருகிறது.

LDF ஆட்சி மீது மக்களுக்கு எதிர்ப்பு உணர்வு உருவானால் மட்டுமே, காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பை கடினமானதாக மாற்றியுள்ளது. இருப்பினூம், சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம், மாநிலத்திலிருந்து படித்த மாணவர்கள் வேலை நிமித்தமாக அதிகப்படியாக வெளியேறுவது போன்ற குறைகளை முன்வைத்து காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது.

2025 உள்ளாட்சி தேர்தலில் 6 மாநகராட்சிகளில் 3-ஐ UDF கைப்பற்றியது.ஒட்டுமொத்தமாக 1,200 உள்ளாட்சி அமைப்புகளில் 648-ஐ காங்கிரஸ் தலைமையிலான UDF வென்றது. இது அந்த கூட்டணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், வேட்பு மனு தாக்கல் நிறைவானதற்கும் தேர்தல் நடைபெறுவதற்கும் இடையே வெறும் 10 நாட்களே இருப்பது, UDF கூட்டணிக்கு சிக்கலாக இருக்கிறது. கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாலேயே மத்தியில் ஆளும் பாஜக கையில் உள்ள தேர்தல் ஆணையம் மூலம் இவ்வாறான நெருக்கடியான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், “வளர்ந்த கேரளம்” (Viksit Keralam) என பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளது. கடந்த நாடளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது, கேரள உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைபற்றியது போன்றவை பாஜகவுக்கு ஊக்கமளித்துள்ளது. மார்ச் 25 நிலவரப்படி, கேரளாவை பொறுத்தவரை வினார் யார்? ரன்னர் யார்? என்ற போட்டியில் LDF , UDF கூட்டணிகளே முன்னணியில் இருக்கின்றன.

புதுச்சேரி தேர்தல் களம் எப்படி இருக்கு?

புதுச்சேரி சிறிய யூனியன் பிரதேசமாக இருந்தாலும், இங்கு நடக்கும் தேர்தல் முக்கியதுவம் வாய்ந்தது. தேசிய அரசியலுடனும், தமிழ்நாட்டு அரசியலுடனும் நெருக்கமானது. மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் இருக்கும் புதுச்சேரி மாநிலத்தில், 16 தொகுதிகளை வெல்லும் கட்சி ஆட்சிக்கு வரும். கூடுதலாக, மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சி 3 நியமன MLAக்களை நியமிப்பார்கள்.

கடந்த 2021 தேர்தலில், NDA கூட்டணி (ரங்கசாமி தலைமயிலான NR காங்கிரஸ் + பாஜக ) 16 இடங்களை பெற்று ஆட்சியை அமைத்தது. இதில் AINRC 10 இடங்களையும், BJP 6 இடங்களையும் பெற்றன. UPA கூட்டணியில் DMK 6 இடங்களும், காங்கிரஸ் 2 இடங்களும் பெற்றன. மற்ற இடங்கள் சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளுக்கு சென்றன. NDA கூட்டணியில், ஐந்து இடங்களில் போட்டியிட்ட அதிமுக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

UPA Vs NDA என இருக்கும் களத்தில் இப்போது TVK-வும் குதித்துள்ளது. தனித்து போட்டியிடுவதாக கூறி, 30 வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. இந்த முறை புதுச்சேரியில் யார் வெற்றி வாகை சூடப்போகிறார்கள் என்பது, மார்ச் 25 நிலவரப்படி புதிராகவே இருக்கிறது.

Related Posts