பிஹாரில் ரூ. 27,000 கோடி மதிப்பீட்டில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி ஆலையை நிறுவ அதானி பவர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பிஹார் மாநிலத்துக்கு 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வழங்குவது தொடர்பாக அம்மாநில மின் உற்பத்தி நிறுவனத்துடன் அதானி பவர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, பாகல்பூர் மாவட்டம் பிர்பைன்ட்டியில் ரூ.26,482 கோடி மதிப்பில் அனல் மின் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்படும். அங்கு, 800 மெகா வாட் திறன் கொண்ட 3 ஆலைகள் நிறுவப்படும். 5 ஆண்டுகளில் உற்பத்தி தொடங்கப்படும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பிஹார் மாநிலத்துக்கு யூனிட்டுக்கு ரூ.6.075 என்ற விலையில் வழங்கப்படும் என்று அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கட்டுமானப் பணியின்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்ததும் உடனடியாக 3 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய அனல் மின் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக அதானி பவர் நிறுவனம், இந்தியாவில் இதுவரை 18,110 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையங்களை கொண்டிருக்கிறது. இந்நிலையில், புதிதாக பிஹாரில் மின் உற்பத்தி ஆலையை அந்நிறுவனம் துவங்குகிறது.
அதானி நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடன், பங்குசந்தையில் அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை 2.5% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.









