கேப்டன் விஜயகாந்த்தின் கம்பீரக் குரலை திரையரங்குகளில் கேட்கமுடியாமல் போய்விட்டதே என்று ஏங்கிக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு ஒரு பெரும் விருந்து காத்திருக்கிறது.
மறைந்த நடிகரும், தேமுதிகவின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த்தின் பிறந்தநாள் வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வருகிறது. இதையொட்டி, விஜயகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றிப்படமாக இருந்த ‘கேப்டன் பிரபாகரன்’ புதுப்பொலிவுடன் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நவீன 4K தொழில்நுட்பத்தில் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, தமிழ்நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்தப் படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.
இயக்குநர் R.K.செல்வமணி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டின் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் ரிலீஸாக வெளியானது ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம்.இசைஞானி இளையராஜாவின் அதிரடியான இசையில், விஜயகாந்த்துடன் சரத்குமார், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலி கான், லிவிங்ஸ்டன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த அத்திரைப்படம், விஜயகாந்த்துக்கு ‘கேப்டன்’ என்ற பட்டத்தை வழங்கியது. அதுவே இன்றுவரை அவரது அடையாளமாக இருக்கிறது. அதே திரைப்படம் இந்த ஆண்டு அவரது பிறந்த நாளில் வெளியாகவிருப்பது, அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








