BREAKING

பொது

த.வெ.க.வில் இணைந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள்!

அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் உட்பட பலர் த.வெ.க.வில் இன்று இணைந்துள்ள சம்பவம் தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்று தமிழகத்தின் மிக முக்கிய கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நாளில் இருந்தே த.வெ.க.வில் பல கட்சியினர் ஐக்கியமாகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக அதிமுகவினர் கும்பல் கும்பலாக த.வெ.க.வில் இணைகின்றனர்.

சமீபத்தில் அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், முன்னாள் எம்.எல்.ஏ.வும் முன்னாள் டி.ஜி.பி.யுமான நட்ராஜ் த.வெ.க.வில் ஐக்கியம் ஆகினர். அதேபோல, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், பி.சத்தியபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு த.வெ.க.வில் இணைந்தனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் அமைச்சர்களாகவும், முக்கிய நிர்வாகிகளாகவும் இருந்த கடலூர் எம்.சி.சம்பத், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன், என்ஆர் சிவபதி ஆகியோருடன், முன்னாள் MLAக்கள் சங்ககிரி சுந்தரராஜ், ஏ வீரபாண்டி ராஜமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் – மான்ராஜ், சாத்தூர் ராஜவர்மன், கலசப்பாக்கம் பன்னீர்செல்வம், பாப்பிரெட்டிபட்டி கோவிந்தசாமி ஆகியோரும் த.வெ.க.வில் இணைந்தனர்.

இவர்களுடன் சுமார் 10 ஆயிரம் பேர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி த.வெ.க. பொதுச்செயலாளரும், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் முன்னிலையில் பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியில் இணைந்துள்ளனர்.

இன்று நடந்த பிரமாண்ட இணைப்பு விழாவில் இவர்கள் இணைந்தனர். புதிதாக இணைந்திருப்பவர்கள் குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தவெகவில் இணையும் அனைவரின் உணர்வுக்கும் மதிப்பளிக்கப்படும்; உரிய மரியாதை அளிக்கப்படும். ஜெயலலிதாவின் தொண்டர்கள் விஜயை தலைவராக ஏற்றுக் கொண்டதால் தான் தவெக வெற்றி பெற்றது. அதிமுகவினர் ஆதரித்ததால் தான் சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. முதல்வர் ஆவதற்காக இபிஎஸ் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால் தான் அதிமுக தற்போது இப்படி உள்ளது. கலைஞரின் அனைத்து உண்மையான விசுவாசிகளையும் தவெகவிற்கு வரவேற்கிறோம் வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தவெகவே வெற்றி பெறும்” என்றார்.

கட்டமைப்பு இல்லாத கட்சியா?

முதல்வர் விஜய் பதவியேற்ற நாளில் இருந்து, பல கட்சியை சேர்ந்தவர்கள் த.வெ.க.வில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுகவில் இருந்து கூட்டமாக கூட்டமாக, முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் MLA க்கள், MLA பதவியை ராஜினாமா செய்தவர்கள் என பலர் இணைந்து வருகிறன்றனர். தேர்தலுக்கு முன்பு கட்டமைப்பு இல்லாத கட்சி என்று விமர்சிக்கப்பட்ட த.வெ.க.வில், இன்று கட்டமைப்புடன் இருந்த கட்சிகளில் இருந்து பலர் இணைவதாக மக்கள் பேசிவருகின்றனர்.

Related Posts