பாரதிய ராஷ்டிர சமிதி (BRS) யின் தலைவரும் தெலங்கானாவின் முன்னாள் முதலமைச்சருமான சந்திரசேகர ராவுக்கும் மற்றும் அவரது மகள் கவிதாவுக்கும் இடையிலான மோதல் தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதல் தந்தைக்கு எதிராக கவிதா தனிக்கட்சியை தொடங்கும் அளவிற்கு கொண்டு சென்று விட்டிருக்கிறது.
2014 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து பிரிந்து தெலங்கானா தனி மாநிலமாக உருவானது. இதன் பின்னர் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிர சமிதி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் இதேகட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை பாரதிய ராஷ்டிர சமிதி என மாற்றினார் சந்திரசேகரராவ்.
இதன் பின்னர் நடந்த 2023 ஆம் ஆண்டு மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. 2024 ஆம் நாடாளுமன்ற தேர்தல் காலத்தில் சந்திரசேகர ராவின் மகள் கவிதா டெல்லி மதுபான ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போது தந்தையின் தரப்பில் இருந்து அவருக்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்நிலையில் காலேஸ்வரம் திட்டத்தில் ஊழல்களுக்கு முன்னாள் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஹரீஷ் ராவ் மற்றும் சந்தோஷ் குமார் பொறுப்பு எனவும் அவர்கள் தனது தந்தையை ஏமாற்றி விட்டார்கள் எனவும் கவிதா கருத்து தெரிவித்தார். இதில் நீர்பாசனதுறை அமைச்சர் ஹரீஷ்ராவி கவிதாவின் அத்தை மகனாவர். இந்நிலையில் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சந்திரசேகரராவ் தனது மகளான கவிதாவை கட்சியை விட்டு 2025 ஆம் ஆண்டு செப்டம்பரில் நீக்கினார். இதற்கு எதிராக கவிதா தனது சகோதரர் கே.டி.ராமாராவ் மற்றும் தனது உறவினர்கள் சேர்ந்து தன்னை கட்சியை விட்டு நீக்கிவிட்டதாக புகார் தெரிவித்தார்.
இந்த நிலையில்தான் சமீபத்தில் புதிய கட்சியை தொடங்கி இருக்கிறார் கவிதா. தான் தொடங்கி இருக்கும் இந்த கட்சிக்கு தெலங்கானா ராஷ்டிர சேனா என பெயரிட்டுள்ள இவர், தனது தந்தை தவறவிட்ட தனது மாநிலத்தின் அடையாளத்தையும், தனி மாநிலம் அமைய நடத்தப்பட்ட போராட்டத்தையும் உயர்த்தி பிடித்து வருகிறார்.
ஒரு குடும்பத்திற்குள்ளே நடந்த அதிகார போட்டி தற்போது தந்தை ஒரு கட்சியின் தலைவராகவும் மகள் ஒரு கட்சியின் தலைவராகவும் பிரிந்து போகும் அளவிற்கு மிகப்பெரிய தாக்கத்தை தெலங்கானா மாநில அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அரசியல் மோதல் ஒருபுறம் இருந்தாலும் தனது தந்தையுடனான குடும்ப உறவுகளை பழைய முறையிலேயே கொண்டிருக்க விரும்புவதாக கவிதா கூறியிருக்கிறார்.









