BREAKING

பொது

பதவியேற்ற 48 மணி நேரத்தில் ராஜினாமா.. கர்நாடக அமைச்சரின் முடிவால் டி.கே. சிவக்குமார் அதிர்ச்சி!

கர்நாடகாவில் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவக்குமார் தலைமையிலான புதிய காங்கிரஸ் அரசுக்கு, முதல் நெருக்கடி உருவாகியுள்ளது. அமைச்சராக பதவியேற்று வெறும் இரண்டு நாட்களிலேயே மூத்த காங்கிரஸ் தலைவர் ராமலிங்க ரெட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சரவை ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தியே இந்த திடீர் முடிவுக்குக் காரணமென தெரியவந்துள்ளது. பெங்களூரு நகர வளர்ச்சி (Bengaluru Development) துறையை தனக்கு வழங்குவதாக கூறிவிட்டு, நீர்வள மற்றும் பாசனத் துறை வழங்கப்பட்டதாக ராமலிங்க ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது, “என்னால் என் மனசாட்சிக்கு எதிராக செயல்பட முடியாது. நான் பலமுறை அவமானப்படுத்தப்பட்டுள்ளேன்” என்று வேதனை தெரிவித்தார். மேலும், தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், தான் 53 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் பயணித்து வருவதாகவும், அமைச்சர் பதவியை மட்டுமே ராஜினாமா செய்திருப்பதாகவும், MLAவாகவே தொடரப்போவதாகவும் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

கர்நாடக அரசியலில் நீண்ட கால அனுபவம் கொண்ட ராமலிங்க ரெட்டி, இதற்கு முன்னதாக அம்மாநில முன்னாள் முதல்வர்கள் வீரப்ப மொய்லி, S.M.கிருஷ்ணா ஆகியோரின் அமைச்சரவையில் இருந்திருக்கிறார்.

இந்த ராஜினாமா, முதலமைச்சர் டி.கே. சிவக்குமாருக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரவை அமைக்கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில், காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி பூசலை இந்த சம்பவம் வெளிப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்நிலையில், ராமலிங்க ரெட்டியின் முடிவு குறித்து பேசியுள்ள சிவகுமார், “இது அவருடைய தனிப்பட்ட முடிவு. அவர் என்னுடைய நல்ல நண்பர். நாங்கள் பேசித் தீர்வு காண்போம். கவலைப்பட வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார். கட்சித் தலைமையும் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, புதிய அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்திருப்பது, நிர்வாகம் குறித்த கேள்விகளை எழுப்புவதாக எத்ரிகாட்சியான பாஜக விமர்சித்து வருகிறது.

Related Posts