மும்பையின் தொழில்துறை சூழலும், உலகளாவிய நுகர்வோர் சந்தையும் பிரதானமாக விளங்கும் நிலையில், லைஃப்பாய், பியர்ஸ், டவ், லக்ஸ், பாண்ட்ஸ், குளோஸ் அப், பெப்சோடெண்ட், சர்ப் எக்செல், ரின், விம், புரூ காபி, புரூக் பாண்டு தேநீர் மற்றும் அழகு சாதனங்கள் உள்ளிட்ட அன்றாட நுகர்வோர் பொருட்களைத் தயாரிக்கும் ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் (HUL), வரலாற்றுச் சிறப்புடைய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இந்த நிறுவனம், வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் புதிய CEOவாக பிரியா நாயரை நியமிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தற்போதைய CEO ரோஹித் ஜாவா, ஜூலை 31 அன்று தனது பதவியிலிருந்து விலக உள்ளார். அவரைத் தொடர்ந்து, பிரியா நாயர், HUL நிறுவனத்தின் முதல் பெண் CEOவாக பதவியேற்கிறார் என்ற செய்தி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கோல்காபூரில் பிறந்த பிரியா நாயர், கேரளாவியைச் சேர்ந்த குடும்பத்தில் வளர்ந்தவர். பாரம்பரியம் மற்றும் நவீனத்தையும் இணைத்து தனது தொழில்முறை வாழ்க்கையில் தனிச்சிறப்பை உருவாக்கியவர்.

தற்போது, HUL நிறுவனத்தில் வீட்டு பராமரிப்பு, அழகு, நல்வாழ்வு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவுகளின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிகளைக் கவனித்து வருகிறார். இப்பிரிவுகளில் அவர் செய்த முன்னேற்றங்களே இன்று CEO பதவிக்கு வழிவகுத்தன.
HUL நிறுவனத் தலைவர் நிதின் பரஞ்ச்பே கூறியுள்ளதாவது, “இந்தியச் சந்தையைப் பற்றிய அவரது ஆழமான புரிதலும், நிறுவன வளர்ச்சிக்காக அவர் செய்த பங்களிப்பும் மிக முக்கியமானவை. பிரியாவின் தலைமையில் நிறுவனம் அடுத்த வளர்ச்சி கட்டத்தை எட்டும் என்பதை நாங்கள் நம்புகிறோம்.”
பிரியா நாயரின் நியமனம், இந்தியா மட்டுமல்லாமல் உலகளாவிய கார்ப்பரேட் உலகிலும் பெண்கள் மிக உயர்ந்த பதவிகளை எட்டக்கூடிய திறமை வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பதற்கான உதாரணமாகும்.
எம்டி மற்றும் CEO பதவிக்கு பொறுப்பேற்கும் பிரியா நாயர், “பெண்கள் கனவுகளுக்கு எல்லை இல்லை” என்ற உண்மையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
HUL நிறுவனத்தின் அடுத்த வளர்ச்சி பயணத்தில், பிரியா நாயரின் தலைமையால் ஏற்படவுள்ள மாற்றங்கள், வணிக உலகிலும், சமூக நோக்கிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.









