சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இது அவர் இசையமைக்கும் 100வது படம். நடிகர் சிவகார்த்திகேயனின் 25வது படம்.
இப்படம் இன்று தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உலகமெங்கும் வெளியானது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு நேற்றுதான் தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில், தணிக்கை வாரியம் பரிந்துரைத்த மாற்றங்கள் மற்றும் மாற்றப்பட்ட வசனங்கள் குறித்த பட்டியல் வெளியானது. அது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்சார் வாரிய பரிந்துரைகளின்படி மொத்தம் 25 இடங்களில் காட்சி குறைப்பு (cuts), மியூட்கள் (mute) செய்த பிறகே இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது. படத்தில் மறைந்த முதல்வர் அண்ணாதுரையின் ‘தீ பரவட்டும்’ உட்பட பல்வேறு வசனங்களுக்கு சென்சார் cut வழங்கப்பட்டுள்ளது.
“தீ பரவட்டும்” என்ற வார்த்தையை “நீதி பரவட்டும்” என்று மாற்றுமாறு வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதோடு ‘இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்’ என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும் ‘இந்தி என் கனவை அழித்தது’ என்ற வாசகத்திற்குப் பதிலாக ‘என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது’ என மாற்றப்பட்டுள்ளது.
மேலும், ‘இந்தி கத்துக்கிட்டு’ என்ற வாசகத்தை மியூட் செய்து, “இந்தி அரக்கி” என்ற வாசகத்தை, அது எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் “அரக்கி” என்பதை வேறு விதமாக மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
“இந்தி அரக்கி” என்ற வாசகங்களைக் கொண்ட உருவபொம்மை எரிக்கப்படும் காட்சிகள் நீக்கப்பபட்டுள்ளது.
டிரெய்லரில் ரவி மோகன் கூறும் ‘Anti national’ என்ற வார்த்தை தணிக்கை வாரியத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மேலும், திரைப்படத்தில் தீக்குளிப்பது தொடர்பான காட்சிகள் 50% அளவுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரெயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமை தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களுக்கு பின்னர் படத்தின் நீளம் 2 மணி நேரம் 43 நிமிடங்களாக அமைந்துள்ளது. வசனங்கள், காட்சிகளில் திருத்தம் செய்யப்பட்டாலும், ஏற்கனவே என்ன வசனம் இருந்தது என ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும் காரணத்தால், சமூக ஊடகங்களில் AI உதவியுடன் பழைய வசனங்களை பேச செய்து பராசக்தி படத்தின் காட்சிகள் வலம் வருகின்றன.







