BREAKING

பொழுதுபோக்கு

கமலை மிரட்ட நீங்க யாரு? உச்ச நீதிமன்ற நீதிபதி சரமாரி கேள்வி…

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ திரைப்படத்தை வெளியிட கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தில், சிலம்பரசன், திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இந்த படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் A.R.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கர்நாடகாவில் இப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கமல் தரப்பிலிருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு தொடர்பான விசாரணையில், “நீங்கள் வரலாற்று ஆய்வாளரா அல்லது மொழியியல் அறிஞரா?” என்று கேள்வியெழுப்பி, கன்னட மக்களின் மனதை காயப்படுத்தியதற்காக கமல்ஹாசனை மன்னிப்பு கேட்கும்படி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மன்னிப்பு கேட்கும் வரை படத்தை வெளியிட அனுமதிக்கமுடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்ததால், கர்நாடகாவை தவிர்த்து மற்ற இடங்களில் படம் வெளியானது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கமல்ஹாசன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தக் லைஃப் படத்தை கர்நாடக மாநிலத்தில் வெளியிட தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும், நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறுவது உயர்நீதிமன்றத்தின் வேலை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கமல்ஹாசன் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது என்றும், ஒரு உயர்நீதிமன்றம் அதுபோன்ற கருத்துகளை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது.

Related Posts