இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் R.நல்லகண்ணு, நேற்று மதியம் 1.55 மணிக்கு காலமானார்.அவருடைய உடல், தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ‘பாலன்’ இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்பட்டு, 3 மணி அளவில் அவரது உடல் மாணவர்களின் ஆய்விற்காக சென்னை மருத்துவ கல்லூரியிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்நிலையில், பாலன் இல்லத்திற்கு அரசியல் தலைவர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் நேரில் சென்று தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் அஞ்சலி…
தோழர் நல்லகண்ணுவின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் நேற்று தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், “அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் தோழர் நல்லகண்ணு நினைவுகூரப்படுவார்” என்று கூறியிருந்தார்.
காங்கிரஸ் MP ராகுல்கந்தி வெளியிட்டிருந்த பதிவில், “ஏழைகள், விளிம்பு நிலை மக்களுகென நேமையாக, எளிமையாக அசைக்கமுடியாத அர்ப்பணிப்புகான ஒரு அரிய எடுத்துக்காட்டு தோழர் நல்லகண்ணுவின் வாழ்க்கை” என்று புகழாரம் சூட்டி தனது இரங்கலை பதிவு செய்திருந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்,துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் மற்ற தலைவர்கள், நல்லகண்ணுவின் உடலுக்கு நேற்று நேரில் சென்று மரியாதை செலுத்தினர். பின்னர் நல்லகண்ணு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “பொது வாழ்வில் இருப்பவர்களும் அரசியலில் இருப்பவர்களும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு தோழர் நல்லகண்ணு ஒரு உதாரணம்” என்றார்.
நேற்று, ராஜிவ் காந்தி மருத்துவமனையில், விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அஞ்சலி செலுத்தியிருந்தார்கள்.
நேற்று இரவு, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. அவர் கடைசி மூச்சு வரை விளிம்புநிலை மக்களுக்காக போராடியவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டால் எங்களுக்கு பெருமை. அவர் அதற்கு முழு தகுதியுடைவர்” என்றார்.
நேற்று இரவு தவெக தலைவர் விஜய் நேரில் சென்று அய்யா நல்லக்கண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.முன்னதாக “விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் இரா.நல்லகண்ணு அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு” என்று பதிவிட்டிருந்தார்.
தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரும் தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு புகழஞ்சலி செலுத்தினர். நல்லகண்ணுவிற்கு வைகோ உணர்ச்சி பொங்க வீரவணக்கம் செலுத்தினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நலக்கண்ணுவிற்கு மரணமில்லை.. எமன் கூட அவரை வீழ்த்த போராடினார்..அவரை யாரும் மறக்கமாட்டோம்.. உடல்நிலை சரியில்லாத போதிலும் போராட்ட களத்தில் நின்றவர்.. மிகப்பெரிய படிப்பாளி.. லட்சியவாதி..எளிமையின் சிகரம்.. நேர்மையின் சிகரம்..” என்று உணர்ச்சி பொங்க பேசினார்.
புகழஞ்சலி செலுத்திய திரையுலகினர்..
தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஓமந்தூராரை பாக்கல..காமராஜரை பாக்கல.. கக்கனை பாக்கல.. அண்ணாவை பாக்கல.. அவர்கள் எல்லாரையும் சேர்த்து தோழர் நல்லகண்ணுவை பார்த்தேன். எளிமையாக நேர்மையாக இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு தோழர் நல்லகண்ணு ஒரு எடுத்துக்காட்டு” என்றார். அதேபோல், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோரும் நேரில் சென்று புகழஞ்சலி செலுத்தினர்.









