செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்களில் பொய் செய்திகள் மற்றும் அவதூறான தகவல்களை பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
சில நேரங்களில் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி ஊடகங்களில் பொய்யான உண்மைக்குப் புறம்பான செய்திகள் தகவல்கள் உலா வருகின்றன. அந்த செய்திகள் சில நேரங்களில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக பெண்கள் குறித்த அவதூறான செய்திகள், மதம் குறித்த சர்ச்சையான தகவல்கள், அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறான பொய்கள் ஆகியவையால் சமூகத்தின் அமைதியே சில நேரங்களில் கேள்விக்குறியாகிவிடுகிறது.
இந்த பாதக செயலை தடுக்கும் நோக்கில், இது தொடர்பாக ஆய்வு நடத்த, 2 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக அரசு 6 பேர் கொண்ட குழுவை நியமித்தது. பல கட்ட ஆய்வுகள் மற்றும் ஆலோசனைக்கு பிறகு பொய் செய்திகளை கட்டுப்படுத்த உதவும், “கர்நாடக தவறான தகவல் மற்றும் பொய்ச் செய்திகள் தடை” மசோதாவை அம்மாநில சட்டத்துறையிடம் சமர்ப்பித்துள்ளது.

அந்த மசோதாவின்படி, சமூக வலைத்தளங்களில், பத்திரிகைகளில் பொய்ச் செய்திகளை பரப்பினால், 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தவறான தகவல்களைப் பரப்புதல், அவதூறு கருத்துகளை பகிர்வோருக்கு 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
இந்த வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா விரைவில் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக அரசின் இந்த முடிவு பேச்சுரிமைக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இருப்பதாகவும், சட்டப்பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பு மசோதாவை முழுமையாக மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்று கர்நாடகா அரசைப் பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.









