BREAKING

பொது

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு வழக்கு.. நடிகர் ஜெயராமிடம் விசாரணை!

சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம் தொடர்பாக, சென்னையில் நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது.

கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் சன்னிதானத்திற்கு இருபுறமும் துவார பாலகர்கள் சிலை இருக்கிறது. அந்த சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த தங்கக்கவசம் மற்றும் சன்னிதான நிலைக்கதவில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடு ஆகியவை கடந்த 2019-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சீர்செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.

பின்பு அவை சன்னிதானத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது 4.54 கிலோ கிராம் தங்கம் குறைவாக உள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் சீர்செய்ய கொண்டு செல்லப்பட்ட இடத்தில் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக,தேவசம் போர்டின் முன்னாள் தலைவர், தங்க முலாம் பூசுவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்க இயக்குனரகம் கடந்த 19-ந்தேதி அதிரடி சோதனை நடத்தியது. தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின்போது 100 கிராம் தங்க கட்டி மற்றும் வழக்கு தொடரபான பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், இன்று நடிகர் ஜெயராமிடமும் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர். சபரிமலை துவார பாலகரின் சிலையில் இருந்த தங்கக்கவசம், தங்க முலாம் பூசுவதற்காக சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, நடிகர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 40 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மாலையணிந்து சபரிமலைக்கு சென்று வருவதாகவும், அப்போது தனக்கு உன்னிகிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் ஜெயராம் கூறியிருக்கிறார். சபரிமலைக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தகடை வீட்டில் பூஜைக்காக வைத்தால் செழிப்பு ஏற்படும் என்பதால் தனது வீட்டில் வைத்து பூஜை செய்ததாக நடிகர் ஜெயராம் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருப்பது இந்த வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Posts