ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 28 காவல் நிலையங்களில் கடந்த ஆறு மாதங்களாக பல்வேறு குற்ற வழக்குகளில் இருந்து மீட்கப்பட்ட ரூ.18 கோடி மதிப்புள்ள பொருட்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவை, திருமுல்லைவாயில், எஸ்.எம்.நகரில் உள்ள போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் நேற்று காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வு பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த மீட்கப்பட்ட பொருட்களில் 922 கிலோ வெள்ளி கட்டிகள் (ரூ.9 கோடி), 87 பவுன் தங்க நகைகள், வெளிநாட்டு செருப்புகள் (ரூ.35 லட்சம்), ஏசி யூனிட்கள் (ரூ.36 லட்சம்), 2.5 டன் அலுமினியம், 317 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை அடங்கும். அதேபோல், நிலம் மற்றும் சைபர் குற்றங்கள், ஆவண மோசடி, நில மோசடி, வேலைவாய்ப்பு மோசடி உள்ளிட்ட 16 வழக்குகளில் இருந்து மீட்கப்பட்ட 6.89 கோடி ரூபாய் பணமும் இதில் அடங்கும். மேலும், பங்கு சந்தை, பகுதி நேர வேலைவாய்ப்பு தொடர்பான ‘ஆன்லைன்’ மோசடி புகாரில் பெறப்பட்ட 32 வழக்குகளில், 57.43 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. மேற்கூறிய குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட 18 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, கமிஷனர் சங்கர் உரியவர்களிடம் நேற்று ஒப்படைத்தார்.

ஆவடி கமிஷனர் சங்கருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். பொதுமக்களின் புகார்களை நேரடியாகப் பெற்று தீர்வு காண அதிகாரிகளுக்கு கமிஷனர் சங்கர் உத்தரவிட்டார். மேலும் சந்தேகத்திற்குரிய லிங்க்கை கிளிக் செய்வதைத் தவிர்த்து பண இழப்பை தடுக்க பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்வில் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், துணை ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.









