சென்னை அடையாறில் பீஹார் இளைஞர் குடும்பத்தோடு கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில், நான்கு நாட்களாக தேடப்பட்ட அவரது மனைவியின் சடலம் குப்பைக்கிடங்கில் இன்று கண்டெடுக்கப்பட்டது.
அடையாறு, இந்திரா நகர் 1வது அவென்யூவில், கடந்த 26 ம் தேதி சாலை ஓரமாக, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசப்பட்டு கிடந்தார். முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், கொல்லப்பட்ட வாலிபர், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ் குமார் என்பது தெரியவந்தது. தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலை செய்த கவுரவ் குமார், தன் மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது ஆண் குழந்தையுடன் அதே கல்லூரி வளாகத்தில் வசித்து வந்திருக்கிறார்.
கவுரவ் குமார் கொலைதொடர்பாக CCTV காட்சிகளை அடிப்படையாக வைத்து சிலரை கைது செய்து சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கவுரவ் குமாரின் பிஹாரை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஒரு குடும்பத்தையே கொலை செய்தது தெரியவந்தது. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மத்திய கைலாஷ் பகுதியில் கூவம் ஆற்றங்கரை பகுதியில் குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றினர்.
கடந்த 4 நாட்களாக பெருங்குடி குப்பை கிடங்கில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன், முனிதா குமாரி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். பெருங்குடி குப்பை கிடங்கில் தெரு நாய்கள் புகுந்து உடலை தூக்கி சென்று விடக்கூடாது என்பதற்காக இரவு, பகலாகவும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்தனர். JCB எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றுவந்த நிலையில், பீகார் வாலிபரின் மனைவியான முனிதா குமாரியின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
பீகார் வாலிபர் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தையின் உடல் ஏற்கனவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் முனிதா குமாரின் உடலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிக்கந்தர், ரவிந்திரநாத் தாகூர், நரேந்திர தாகூர், பிகாஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர், 30 என்பவர், கொல்லப்பட்ட வாலிபரின் உடலை, இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்தவர்களில் ஒருவர் என, தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில், அடையாறு மற்றும் தரமணி உள்ளிட்ட பகுதியில் பதுங்கியிருந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர், 33, நரேந்திரகுமார், 45, ரவீந்திரநாத் தாகூர், 45, பிஹாஷ், 24, உள்ளிட்ட ஐந்து பேரை, போலீசார் கைதுசெய்துள்ளனர்.









