திருமணத்திற்கு முன்பு ஜோடிகளுக்கு HIV பரிசோதனையை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற மேகாலயா அரசு திட்டமிட்டுள்ளது. மேகாலயாவில் HIVயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிகை அதிகரித்து வருவதால் இந்த முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
HIVயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் பட்டியலில், இந்திய அளவில் மேகாலயா 6வது இடத்தில் இருக்கிறது. அம்மாநிலத்தில் HIV குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், எய்ட்ஸ் பரவலை தடுக்கவும் 2006 ஆம் ஆண்டில் ‘மேகாலயா AIDS கட்டுப்பாடு சங்கம் (Meghalaya AIDS Control Society -MACS)’ நிறுவப்பட்டது. ஆனாலும் HIV பரவலை திட்டமிட்டபடி குறைக்கமுடியவில்லை. இதையடுத்து திருமணத்திற்கு முன்பு ஜோடிகள் HIV பரிசோதனை செய்துகொள்வதை கட்டாயமாக்க அம்மாநில அரசு திட்டமிட்டு வருகிறது.

இது போன்ற சட்டம் இயற்ற கோவா தங்களது சட்டமன்றத்தில் ஏற்கனவே மசோதா தாக்கல் செய்துள்ளது. கோவாவை முன்னோடியாக கொண்டு, இந்த திட்டத்தை வகுக்க மேகாலயா அமைச்சரவை ஆலோசித்து வருகிறது.
இந்த திட்டம் குறித்து பேசிய மேகாலயா சுகாதாரத்துறை அமைச்சர் அப்பரீன் லங்டோ, “கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக MACS மூலம் HIV / AIDS குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இப்போது அடுத்தகட்டமாக பரிசோதனைகள் செய்து பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்க திட்டமிட்டுள்ளோம். மேகாலயாவில் இந்த தொற்றின் பரவல் எந்த அளவுக்கு இருக்கிறது என்பது குறித்து சரியான தகவல் இல்லாமல், அதை கட்டுப்படுத்த முடியாது. அதனால்தான் இந்த முடிவை எடுப்பது குறித்து ஆலோசிக்கிறோம். இது சமுதாயத்திற்கு நல்லது செய்யும்” என்றார்.
HIVயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் இருக்கும் பட்டியலில், இந்திய அளவில் மேகாலயா 6வது இடத்தில் இருக்கும் நிலையில், இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களில் மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர் ஆகிய மூன்றும் இருக்கின்றன. இது வடகிழக்கு பகுதியில் HIV பரவல் எந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்நிலையில், தங்களை போலவே மற்ற வடகிழக்கு மாநிலங்களும், இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேகாலயா அரசு வலியுறுத்தியுள்ளது.









