தனியார் துறை வங்கியான IDFC வங்கியில் மிகப்பெரிய Scam நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
ஹரியானா அரசுத் துறை ஒன்று, IDFC வங்கியில் இருந்த தனது கணக்கை மூடிவிட்டு பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற முடிவு செய்தது. அதற்காக கணக்கை சரிபார்த்தபோது, வங்கியின் பதிவில் இருந்த பணமும் தங்களுடைய ஆவணங்களில் இருந்த பணமும் ஒன்றாக இல்லை. “எங்கோ தவறு இருக்கிறது…” என்ற சந்தேகத்தால் வங்கி மேனேஜ்மெண்டில் புகார் தெரிவித்துள்ளது.
இதற்குப் பிறகு சண்டிகரில் உள்ள IDFC First Bank கிளையில் நடந்த ஆய்வில், சுமார் ரூ.590 கோடி வரை மிகப்பெரிய Scam நடந்திருக்கிறது என்று தெரியவந்துள்ளது. ஒரு கணக்கில் மட்டும் அல்ல… பல அரசு துறைகளின் கணக்குகளிலும் இதே பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது சாதாரண விஷயம் அல்ல. ஏனெனில் IDFC First Bank-ன் ஒரு சராசரி காலாண்டு லாபத்தை விட இது ரூ.100 கோடிகளுக்கும் மேல் அதிகம்.
இதுதொடர்பான செய்திகள் வெளியான உடனே பங்குச்சந்தையில் IDFC வங்கியின் பங்கு தடாலடியாக சரிய தொடங்கியது. பல முதலீட்டாளர்கள் என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளும் முன்பு, நேற்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட 20% வரை சரிந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக வங்கி உடனடியாக நடவடிக்கை தொடங்கியது. இதில் சந்தேகிக்கப்படும் 4 ஊழியர்கள் உடனடியாக பணிநீக்கம் செய்தது IDFC வங்கி. இந்த Scam எப்படி நடந்தது, யார் யாருக்கு தொடர்பு உள்ளது போன்ற விவரங்களை கண்டுபிடிக்க Forensic Audit நிறுவனமான KPMG நியமிக்கப்பட்டுள்ளது. இதில் சில அரசு துறை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது.
இதற்கு பிறகு பல முக்கிய தனியார் வங்கிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் AU Small Finance Bank-இலும் ரூ.47 கோடி அரசு துறைகளில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தில் Scam நடந்திருக்கலாம் என தகவல் வெளியாகி, அந்த வங்கியிலும் ஆய்வு நடைபெற்று வருகிறது. இதனால் ஆய்வு முடியும் வரை IDFC First Bank மற்றும் AU Small Finance Bank ஆகிய இரண்டு வங்கிகளும் அரசு துறை சார்ந்த பண பரிவர்த்தனைகளில் ஈடுபடக்கூடாது என்று RBI தெரிவித்துள்ளது. இந்த இரண்டு வங்கிகளில் நடைபெற்று வரும் ஆய்வுகளை RBI தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் RBI ஆளுநர் Sanjay Malhotra, இது ஒரு குறிப்பிட்ட கிளையில் மட்டுமே நடந்த சம்பவம் தான், இதனால் பெரிய அளவிலான ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இருப்பினும் ரூ.590 கோடி மோசடி சம்பவம் வங்கிகள் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.









