ஆண்களைவிடப் பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள் என்ற பொதுவாகச் சொல்லப்படும் நிலையில், பெண்களைவிட ஆண்கள் இரண்டு மடங்கு வேகமாக காதல் வயப்படுவதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை ஆஸ்திரேலியா தேசிய பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியது. 33 நாடுகளைச் சேர்ந்த 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 808 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.
எவ்வளவு சீக்கிரமாகக் காதலில் விழுந்தார்கள், எவ்வளவு ஆழமாகக் காதல் செய்கிறார்கள், இதுவரை எத்தனை முறை காதலித்திருக்கிறார்கள், தங்கள் இணையின் மீது எந்த அளவிற்குப் பிரியமாக இருந்தார்கள் என்பது உட்படப் பல கேள்விகள் கேட்கப்பட்டன. ஆய்வுகளின் முடிவில் பல சுவாரசியமான முடிவுகள் வெளியாகியுள்ளன.

பெண்களைவிட இரண்டுமடங்கு வேகமாக ஆண்கள் காதலில் விழுகிறார்கள் என்றும், புதிதாக காதலில் விழ ஆண்களுக்கு சராசரியாக 4 வாரங்கள் ஆகிறது என்றும் தெரியவந்துள்ளது. ஆனால், பெண்கள் சற்று நிதானித்து காதலில் விழுவதாகவும், அவர்கள் காதல் வயப்படக் கிட்டத்தட்ட 2 மாதங்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றும் ஆய்வு முடிவில் வெளியாகியுள்ளது. என்னதான் பொறுத்திருந்து காதலில் விழுந்தாலும், தங்களுடைய இணையை அதிக நேரம் நினைத்துக்கொண்டே இருப்பதிலும், அவர்களை அதிகமாகக் காதலிப்பதிலும் பெண்கள் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்ற சுவாரசிய தகவலும் கிடைத்துள்ளது.
பாலின சமத்துவம் அதிகம் இருக்கும் நாடுகளிலும், நிலையான பொருளாதாரம் இருக்கும் நாடுகளிலும் இளைஞர்கள் காதல் செய்ய ஏதுவான சூழல் இருப்பதாகவும், அந்த நாடுகளில் இளைஞர்கள் அதிக அளவில் காதல் வயப்படுவதும் தெரியவந்துள்ளது. காதலும் குடும்ப அமைப்புகளும் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தவே இந்த ஆய்வை மேற்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளது.









