“தன்னை அரசியல் ரீதியாக பழிவாங்கிய எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராகவோ அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ விட மாட்டேன்” என்று சபதம் எடுத்துள்ளார் சசிகலா. அதற்காகவே, ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். கட்சியின் சின்னமாக தென்னந்தோப்பு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பல்வேறு ஆலோசனைகளிலும் கூட்டணி பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றன.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் சசிகலா. அதன் பிறகு அரசியலில் நேரடியாக அதிகம் ஈடுபடாமல் இருந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
அந்த நிகழ்ச்சியில் அண்ணா, M.G.R மற்றும் ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களைக் கொண்ட கொடியையும் அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து இன்று (13.03.2026) அந்தக் கட்சியின் பெயரையும் தெரிவித்துள்ளார் சசிகலா.

“அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்” என்ற பெயரில், தென்னந்தோப்பை கட்சியின் சின்னமாக அறிவித்துள்ளார். இந்தக் கட்சியை ஆரம்பிப்பதில் முக்கிய பங்காற்றியது சசிகலாவின் சகோதரரின் மகன் ஜெய் ஆனந்த் தான். அவர்தான் சசிகலா யாரை சந்திக்க வேண்டும், யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பதில் முக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறாராம்.
கட்சியின் பெயரை அறிவித்த பிறகு பேசிய சசிகலா, “தனிமரம் தோப்பாகாது; கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம்,” என்று தெரிவித்துள்ளார். இதனால், இது ராமதாஸ் – சசிகலா கூட்டணி பற்றிய அறிவிப்பாக இருக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
கடந்த மார்ச் 10ஆம் தேதி, தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார் சசிகலா. இந்த சந்திப்புக்குப் பிறகு தனது கட்சியின் பெயரை அறிவித்தது அரசியல் வட்டாரங்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அந்த சந்திப்பின் போது, வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இரு தரப்பும் சேர்ந்து கூட்டணி அமைத்து போட்டியிட முடியுமா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழக அரசியலில் தற்போது மிகப்பெரிய கூட்டணியாக உள்ளது திமுக கூட்டணி. அதேபோல் அதிமுக கூட்டணியும் இணை பலத்துடன் உள்ளது. இந்த இரண்டு முக்கியக் கட்சிகள் தவிர புதிய கூட்டணி அமைப்பது பற்றி சசிகலா மற்றும் ராமதாஸ் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
மேலும், தவெக இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்கவில்லை. அதனால் தவெக தலைமையில் ராமதாஸ், சசிகலா, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் சில துணைக் கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அமைக்க சசிகலா தரப்பில் மூவ் நடக்கிறது. ஆனால் இந்த ‘மூவ்’விற்கு விஜய் என்ன சொல்லப்போகிறார் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது. டெல்லிக்கு விசிட் போக இருக்கும் விஜயின் அடுத்த நடவடிக்கையில் ஏதேனும் புதிய மாற்றங்கள் இருக்கிறதா என சசிகலா தரப்பினர் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.









