ஒரு கடை திறப்பு விழாவின்போது நடிகை சமந்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள பெரும் ரசிகர் கூட்டம் அவரை சூழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஒரு ஷோரூமை திறப்பதற்காக நடிகை சமந்தா சென்றார். அப்போது அவரை ரசிகர் கூட்டம் சூழ்ந்துகொண்டு போட்டோ எடுக்க முயன்றது. கூட்ட நெரிசலில் இருந்து தப்பித்து வேகமாக தனது காருக்குள் சமந்தா செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன், நடிகை நிதி அகர்வால் இதேபோன்று கூட நெரிசலில் சிக்கி அது சர்ச்சையானது. ராஜாசாப் படத்தில் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது. அதில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை அங்கிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். சிலர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோ அப்போது இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமந்தாவும் அதேபோல் கட்டுப்பாடற்ற ரசிகர்களால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ள சமந்தாவின் நெருங்கிய தோழியும் பாடகியுமான சின்மயி, “சமந்தாவின் டீம் அவரை பாதுகாப்பாக கொண்டுவர முயற்சி செய்திருக்கிறது. சமந்தாவின் பாதுகாவலர் ஆர்யாவுக்கு கண்டிப்பாக சில காயங்கள் ஏற்பட்டிருக்கும். அடிப்படை பழக்கவழக்கம் கூட தெரியாத மனித கூட்டத்தை கட்டுப்படுத்துவது ஒன்றும் நடிகையின் வேலையில்லை” என காட்டமாக கூறியுள்ளார்.









