லண்டன் பயண நிதி முறைகேடு வழக்கில், இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே இன்று கைது செய்யபட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார ரீதியாக திவால் நிலையை எட்டியபோது, அப்போதைய அதிபராக இருந்த கோட்டபயா ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, இலங்கையின் பிரதமராக ஆறு முறை இருந்த ரணில் விக்கிரமசிங்கே அதிபராக பதவியேற்றார். பின்னர் 2024 ஆம் ஆண்டுவரை இலங்கையின் அதிபராக இருந்து, பொருளாதார நிலையை சீராக்கினார்.
ரணில் அதிபராக இருந்தபோது 2023 செப்டம்பர் மாதத்தில் லண்டன் பயணம் மேற்கொண்டார். அவரது மனைவி மைத்ரி, லண்டன் பல்கலையில் பட்டம் பெற்றதை முன்னிட்டு இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டது. இதில், ரணில் உட்பட 10 நபர்கள் கலந்து கொண்டனர். இந்த பயனத்தில் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியாக புகார் எழுந்தது.
இந்த புகாரை இலங்கை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர். ரணில் விக்கிரமசிங்கேவின் தனி செயலாளர் சாண்ட்ரா பெரேரா மற்றும் செயலாளர் சமன் ஏகநாயக்க உட்பட பலர் விசாரிக்கப்பட்டனர். இலங்கை அரசுக்கு ரணில் விக்கிரமசிங்கே சுமார் ரூ.16.9 மில்லியன் இழப்பு ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த புகார் தொடர்பாக இன்று காலை ரணில் விக்கிரமசிங்கே விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட உள்ளது.









