இந்த ஆண்டு வெனிஸ் திரைப்பட விழாவில் பலரது நினைவிலிருந்து நீக்கமுடியாத ஆவண படமாக ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ (The Voice of Hind Rajab) அமைந்திருக்கிறது.
82வது வெனிஸ் திரைப்பட விழாவில், இஸ்ரேலால் சுட்டுக் கொல்லப்பட்ட 5 வயது பாலஸ்தீன சிறுமியான ஹிந்த் ரஜப்பின் கதையைச் சொல்லும் ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ ஆவணப் படம் வெளியிடப்பட்டது. இந்த படத்தை, பிரெஞ்சு-துனிசிய இயக்குநர் கவுதர் பென் ஹனியாவால் இயக்கியுள்ளார்.
ஹிந்த் என்ற 5 வயது சிறுமியும், அவளது குடும்பத்தினரும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி காசாவில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அவர்கள் பயணித்த கார் இஸ்ரேலியர்களால் தாக்கப்பட்டது. இந்த தாக்குதலின்போது, சிறுமியை தவிர காரில் இருந்த அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். தப்பிய சிறுமி ஹிந்த் காரில் ஒளிந்துகொண்டார்.
கடைசி தருணத்தில், மீட்பு அமைப்பான ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு தனது பெற்றோரின் போனிலிருந்து ஹிந்த் போன் செய்து உதவி கேட்டாள். இதையடுத்து, அந்த சிறுமியை மீட்க ஆம்புலன்ஸ் சென்றது. ஆனால், ஹிந்த் மீட்கப்பட்டு வரும் வழியில், அந்த ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிறுமி உட்பட அனைவரும் சுட்டு கொலை செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை மையமாக வைத்து, ‘தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்’ ஆவணப்படம் எடுக்கப்பட்டது. இந்த ஆவணப்படத்தில், மரணம் தன்னை நெருங்கும் தறுவாயில், போனில் மீட்பு குழுவினரிடம் ஹிந்த் தனது மழலைக் குரலில் உதவி கோரிய ஆடியோ இடம்பெற்றுள்ளது. அந்த குரல் அனைவரின் மனதையும் நடுங்க செய்கிறது. இந்த படத்திற்கு 82வது வெனிஸ் திரைப்பட விழாவில், “சில்வர் லயன்” விருது வழங்கப்பட்டது.

விருது வென்றது குறித்து பேசிய படத்தின் இயக்குநர் பென் ஹனியா, “இந்தப் படத்தால் ஹிந்தை மீண்டும் கொண்டு வரவோ அல்லது அவள் அனுபவித்த அநீதியை மாற்றவோ முடியாது. இது ஹிந்தை பற்றியது மட்டுமல்ல, ஒரு முழு தேசத்தின் கதையைப் பற்றியது” என்றார்.
வெனிஸ் விழாவில் இந்த படத்தை பார்த்தவர்கள், சுமார் 23 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டினர். வெனிஸ் விழாவில் அதிக நேரம் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்ற முதற்படம் இதுதான்.









