மிஷ்கின் இயக்கிய சைக்கோ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை நாம் பார்த்திருக்கிறோம். அதில், சிறுவயதில் ஏற்பட்ட பல இன்னல்களால் காரணமாக மனநலம் பதிக்கபட்டு பெண்களை கடத்தி கொலை செய்வார். அதேபோல், ஜப்பானிலும் ட்விட்டர் மூலம் 9 பேரை கொன்ற ஒருவர், அவர்களின் உடல்களை துண்டுத் துண்டாக வெட்டி, தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்திருந்தார். இதற்காக அவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
2017-ம் ஆண்டு, ஜப்பானின் டோக்கியோவில் இருந்து ஒரு ட்விட்டர் பக்கம் பலரின் கவனத்தை ஈர்த்தது. இதில் ஒரு ஆண் கூறியது: “உண்மையில் வேதனையில் இருப்பவர்களுக்கு நான் உதவ விரும்புகிறேன்… தயவுசெய்து எப்போது வேண்டுமானாலும் எனக்கு தகவல் அனுப்புங்கள்.” இதை கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றியது, அன்பான வார்த்தையாக போல் இருக்கலாம். ஆனால் இதுவே 9 பேரைக் கொடூரமாகக் கொன்ற தொடக்கமாகும் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

2017-ம் ஆண்டு ஒரு இளம்பெண் காணாமல் போனதாக அவரது காதலன் போலீசில் புகார் அளித்தார். இது ஜப்பானை உலுக்கும் கொடூரத்தின் தொடக்கம் என்பது அப்போதுவரை யாருக்கும் தெரியாது. போலீசார் நடத்திய விசாரணையில் ஜாமா நகரில் உள்ள ஒரு வீட்டில், துண்டுகளாக வெட்டப்பட்ட மனித உடல்களை கண்டுபிடித்தனர். 3 குளிர்சாதன பெட்டிகளில் மனிதத் தலைகள்… 5 கன்டெய்னர்களில் மனித உறுப்புகள்… அந்த இடமே நரகத்தைப் போல இருந்தது.
சிறிது நேரத்திலேயே அந்த வீட்டின் உரிமையாளர் தகாஹிரோ சிராய்ஷி கைது செய்யப்பட்டார். 34 வயதான சிராய்ஷி, ட்விட்டர் வழியாக 8 பெண்கள் மற்றும் 1 ஆணை கொலை செய்த சீரியல் கிளர் (Serial Killer) ஆவார். கொலை செய்யப்பட்ட பெண்கள் 15 முதல் 26 வயதுக்குட்பட்டவர்கள். அவர் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோ வைரலானதால், தற்கொலை எண்ணத்தில் இருந்த பெண்கள் அவரிடம் தொடர்பு கொண்டனர். அவர்களை வீடிற்கு வரவழைத்து, பாலியல் துன்புறுத்தல் செய்த பின் கொலை செய்துள்ளார். 8 வது பெண் காணாமல் போனபோது, அவரது காதலன் போலீசில் புகார் அளித்து, ஒருபுறம் தானும் தேடத் தொடங்கினார். அப்போது தான் சிராய்ஷியின் வலையில் சிக்கினார். சிராய்ஷி கொலை செய்த ஒரே ஆண் இவர் தான்.
“என் சொந்த பாலியல் ஆசைகள் மற்றும் பண தேவைக்காகவே இந்த கொலைகளை செய்தேன்” என சிராய்ஷி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார்.
2021-ம் ஆண்டு, அவரது விசாரணைக்கு 435 பேர் நீதிமன்ற வளாகத்தில் கூடினர், ஆனால் இருக்கைகள் மொத்தம் 16 தான்! இந்த வழக்கின் தாக்கம் எவ்வளவு பெரியது என்பதற்கான சான்றே இது. சிராய்ஷியின் ஒப்புக்கொண்ட குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு, டோக்கியோ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அதன்பின் அவர் 3 ஆண்டுகள் கடுமையான காவலில் வைத்திருந்தனர். நேற்று ஜூன் 27, 2025, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு காரணம் அனைத்து மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்துள்ளது தான்.

இது 2022க்கு பிறகு முதன்முறையாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வழக்காகும். கடந்த அக்டோபரில் ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா தலைமையிலான அரசு பதவியேற்றதற்குப் பின் இது முதல் மரண தண்டனை ஆகும். ஜப்பானில் மரண தண்டனை பொதுவாக தூக்கிலிடுவதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. மேலும் கைதிகளுக்கு இதுகுறித்து தகவல் சில மணி நேரத்துக்முன் மட்டுமே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.









