BREAKING

கிரைம்பொது

தந்தை கொலைசெய்யப்பட்ட விரக்தியில் மகள் தற்கொலை! திருநெல்வேலியில் துயர சம்பவம்!

திருநெல்வேலியில், தந்தையை கொலை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் விரக்தி அடைந்த மகள், துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதிமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே வடக்கு நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம். கடந்த மார்ச் 16 ஆம் தேதி வயலுக்கு செல்லும் வழியில், இவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலைசெய்யப்பட்டார். குற்றவாளிகளை காவல்துறை தேடிவந்த நிலையில், உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், திருநெல்வேலி தியாகராஜநகரில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தில் செவிலியராக பணிபுரிந்துவந்த ஆறுமுகத்தின் மகள் பேபி கனி, தந்தை கொலைசெய்யப்பட்டதால் மனவேதனையில் இருந்திருக்கிறார். துக்கம் தாங்காமல், தந்தை இறந்து 6 நாட்களே ஆன சூழலில் மகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன் பேபி கனி, காவல்துறைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், தந்தையை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்றும், தந்தையின் உடல் அருகே தன்னையும் அடக்கம் செய்ய வேண்டும், என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்யாமல் விசாரணை என்ற பெயரில் தினமும் குடும்பத்தினரை அழைத்து தொந்தரவு செய்ததால் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும், இதனால் தான் பேபி கனி தற்கொலை செய்து கொண்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விவசாயி ஆறுமுகம் கொலைவழக்கு தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

Related Posts