BREAKING

பொது

அடுத்த அஸ்திரத்தை எடுத்த முதல்வர் ஸ்டாலின்… முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இன்ப அதிர்ச்சி!

கடந்த மாதம் மகளிர் உரிமைத்தொகையுடன் கோடைக்கால சிறப்பு தொகையையும் சேர்த்து 1.31 கோடி பெண்களுக்கு தலா 5000 ரூபாயை தமிழக அரசு வழங்கியது. தேர்தலை முன்வைத்து முதல்வர் ஸ்டாலின் இதை செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில், இன்று கைம்பெண்கள், முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதமாக முதல்வர் ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் சிறப்பு நிதியாக ரூ. 2000 வரவு வைக்கப்பட்டுள்ளதென்று அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும், 5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும், பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு பலருடைய பாராட்டை பெற்றாலும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் 2 கொலை நடந்திருக்கும் நிலையில், சட்ட ஒழுங்கு குறித்து மக்கள் கேள்வி கேட்காமல் இருக்கவே இந்த அறிவிப்பு என சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Related Posts