பார்ப்பதற்கு செல் போன் வடிவில் இருக்கும் கண்ணாடி தகடு குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. நம் வீட்டில் குழந்தைகள் செல்போன் கேட்டு அடம்பிடித்தால், சில சமயம் டிவி ரிமோட்டை கொடுத்து சமாதானம் செய்வோம். கிட்டத்தட்ட அந்த உளவியலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த அக்ரிலிக் கண்ணாடி தகடு.
குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்கள் என எல்லா தலைமுறையினரையும் செல்போன் அடிமையாக்கி வைத்துள்ளது. நீண்ட நேரம் செல்போனில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு, நேரத்திற்கு சாப்பிடாமலும், தூங்காமலும் தங்கள் உடலையும் மனதையும் சிலர் கெடுத்துக்கொள்கிறார்கள். இதற்கு தனிமை, மனச்சோர்வு, மனஅழுத்தம், சமூக அழுத்தம் என பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
செல்போனில் அதிக நேரம் செலவிடும் பழக்கத்திலிருந்து வெளியே வர கவுன்செல்லிங், தியானம் என பல வழிமுறைகள் இருக்கின்றன. அனால் அந்த வழிமுறைகள் எல்லாம் அனைவராலும் எளிதில் பின்பற்ற கூடிய வகையில் இல்லாததால், அதற்கு மாற்று பாதையை பலரும் தேடுகிறார்கள். அவர்களை குறிவைத்தே இந்த அக்ரிலிக் கண்ணாடி தகடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மெத்தாபோன் என்ற நிறுவனம் இந்த அக்ரிலிக் கண்ணடி தகடை கண்டுபிடித்துள்ளது. கண்ணாடி தகடு என்றால், போன் வடிவில் இருக்கும் கண்ணாடி… அவ்வளவுதான்! இதற்கு எந்த மின்சாரமும் தேவையில்லை; எந்த நோட்டிபிகேஷனும் கிடையாது; எந்த கேமராவும் இல்லை; போன் வடிவில் இருக்கிறதே தவிர போனில் இருக்கும் எந்த பாகங்களும் வசதிகளும் இல்லை. ஆனாலும் மக்கள் இதனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
கண்ணாடியின் அளவிற்கு ஏற்றாற்போல இதன் விலையும் வேறுபடுகிறது. 20 முதல் 35 அமெரிக்க டாலர் வரை இதன் விலை இருக்கிறது. வெறும் கண்ணாடி என்றாலும், அதனை செலபோனாக நினைத்து அடிக்கடி ரீலிஸ் ஸ்க்ரோல் செய்வது போல, வெறும் கண்ணாடியை தடவினால், மூளையில் சில நரம்புகள் அமைதியாவதாக மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

செல்போன் பயன்படுத்தியே ஆகவேண்டும் என்று வெறிபிடித்தது போல எழும் தீவிர எண்ணத்தை கட்டுப்படுத்த இந்த கண்ணாடி தகடு உதவுமென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், தனிமை மனஅழுத்தம் போன்ற பெரிய சிக்கலுக்கு இது எந்தவகையிலும் ஆறுதலாக இருக்காது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
செல்போன் போதையிலிருந்து வெளியேற இந்த கண்ணாடி தகடு உதவும் என்று சிலர் கூறினாலும், செல்போன் அடிமைத்தனத்திலிருந்து வெளியேற எத்தனையோ வழிமுறைகள் இருக்கும்போது, இது வீண் செலவு என்றும் இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் வேலை என்றும் சிலர் விமர்சித்து வருகிறார்கள்.








